‘சார் ஒரு போன் பண்ணனும்’ என்று உங்க மொபைல் கேக்குறாங்களா? – அப்போ உஷாரா இருங்க!

Published On:

| By christopher

இன்றைய தொழில்நுட்ப உலகில் பணம் சம்பாதிப்பதைவிட, அதைக் காப்பாற்றுவது என்பது மிக கஷ்டம் என்ற நிலை வந்துவிட்டது.

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் ரகசிய பின் நம்பர் போன்றவற்றை பெற்று நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடுவதில் தொடங்கி, நாள்தோறும் ஒரு புதுப்புது திட்டத்துடன் மக்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை `ஆட்டையைப் போட’ பல்வேறு கும்பல்கள் டிசைன் டிசைனாக களமிறங்கியுள்ளன.

இதன் லேட்டஸ்ட் வெர்சன் தான், பேருந்து நிறுத்தங்களிலோ, கடைகளிலோ நிற்கும் நம்மிடம் வந்து, ‘சார் என்னிடம் மொபைல் இல்ல… ஒரு எமர்ஜென்சி கால் பண்ணனும் கொஞ்சம் உங்க மொபைல் தர்ரீங்களா? நான் போன் பேசிட்டு தந்துடுறேன்’ என்று வரும் புதிய கிரிமினல்கள்.

அவர்களிடம் உங்கள் மொபைலை ஒருவேளை கொடுத்துவிட்டால், அவ்வளவு தான், உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-களை தடுப்பதில் தொடங்கி, இருந்து உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த தொகையையும் காலி செய்வது வரை என உங்களை அறியாமலேயே கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டு சாதுர்யமாக அங்கிருந்து அந்த மோசடி நபர் கம்பி நீட்டி விடுவார்.

நல்லெண்ணத்துடன் உதவி செய்வதாக நினைத்து மொபலை வழங்கிய உங்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றமும், பல ஆண்டுகளாக உழைத்து சேமித்த பணத்தை இழப்பது மட்டுமே.

இந்த நிலையில் இந்த மோசடி செய்பவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள், யாரை குறிவைக்கிறார்கள், மிக முக்கியமாக, உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!

உங்களிடம் இருந்து இப்படி மொபைல் வாங்குபவர்கள், நீங்கள் அசந்த நேரத்தில் முதலில் ஒரு மோசடி செயலியை இன்ஸ்டால் செய்கின்றனர்.

அல்லது உங்கள் செல்போன் செட்டிங்ஸில் சில மாற்றங்களை செய்து, உங்கள் மொபைல் மற்றும் பர்ஸ்னல் விவரங்களை மர்ம நபருக்கு உங்களுக்கே தெரியாதபடி அனுப்புகின்றனர். இதன்மூலம் உங்கள் கால் பார்வர்டிங் ஆப்சனை ஆன் செய்து உங்களுக்கு வரக்கூடிய ஓடிபிக்களை அவர்களும் பெறும் வகையில் மாற்றி விடுகின்றனர்.

தொடர்ந்து உங்களிடம் மொபைல் திருப்பியளிக்கப்பட்ட பின்னர், அடுத்த சில நிமிடங்களில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் காலியாகும் அல்லது உங்கள் சமூகவலைதள பக்கங்கள் முடக்கப்பட்டு கடவு சொற்கள் மாற்றப்படும்.

இந்த மோசடியாளர்கள் முதலில் குறி வைப்பது தொழில்நுட்பங்களை கையாள தெரியாதவர்களையும், முதியவர்களையும் தான். மிக சோகமாக பாவப்பட்டு வழங்கும் வகையில் மோசடியாளர்கள் முதலில் தாங்கள் குறிவைத்த நபரிடம் பேசுகின்றனர். அதை உண்மையென நம்பி தங்களது மொபலை கொடுப்பவர்களே அவர்களின் முதல் பலியாடுகள்.

இந்த நூதன மோசடியாளர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது?

🛑முதலில் உதவி கேட்கும் அந்நிய நபர்கள் யாரிடமும் உங்கள் மொபலை வழங்காதீர்கள்.

🛑ஒருவேளை அவர்கள் சொல்வது நம்பும்படி தோன்றினால், அவர்கள் சொல்லும் நம்பருக்கு நீங்களே கால் செய்து, ஸ்பீக்கரில் போட்டு பேச சொல்லுங்கள். அவர்கள் கையில் மொபலை வழங்காமல் இருப்பது மிக மிக நல்லது.

🛑அடிக்கடி உங்கள் மொபைல் செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் ‘கால் ஃபார்வர்டிங்’ அல்லது ’கால் டைவர்ட்’ ஆப்சன் ஆஃப் செய்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

🛑உங்களுக்கு வரும் ஓடிபி எண்ணை யாரிடமும், எக்காரணத்தை கொண்டும் பகிராதீர்கள்.

🛑ஒருவேளை நீங்கள் மோசடி செய்யப்பட்டதாக உணர்ந்தால், உடனடியாக தேசிய சைபர் கிரைம் உதவி எண் ’1930’ எண்ணுக்கு அழைத்து உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி திமுகவுக்கே… ரகசியம் சொல்லும் வி.சி. சந்திரகுமார்

இம்ரான் கானுக்கும், அவரது மனைவிக்கும் சிறை தண்டனை விதிப்பு! – பின்னணி என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel