பியூட்டி டிப்ஸ்: இயற்கை முறையில் முகப்பருவுக்குத் தீர்வு உண்டா?

டிரெண்டிங்

டீன் ஏஜ் பருவத்தினரின் முக்கியக் கவலைகளுள் ஒன்று முகப்பரு. என்னதான் பல வகை க்ரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்தினாலும், முகப்பரு பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை என்று பலரும் கவலைப்படுவதை பார்த்திருக்கிறோம். இதனால் ஏற்படும் மன உளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை.

வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும், போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடத்தை சிலர் பெரிய பிரச்சினையாக உணர்வார்கள். சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி, முகத்தின் அழகைக் கெடுக்கின்றன. முகப்பருவில் இருந்து விடுதலையே கிடையாதா? இதற்கான தீர்வுதான் என்ன?

இந்தப் பிரச்சினைகளுக்கு இயற்கையான முறையில் இதோ சில தீர்வுகள்…

* சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால், பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் தடவினால், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.

* ரோஜா மொட்டுக்களை எடுத்துச் சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின், அந்த நீரை வடிகட்டி, முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின், துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்துவர, முகப்பருக்கள் நீங்கி, சருமம் பொலிவடையும்.

* எலுமிச்சைச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும்.

* வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.

* சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. காற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், சோற்றை கூழாக்கி முகத்தில் தடவிவர, பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

* அறுகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து, பருக்களில் தடவலாம். இது, சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. பருவைக் குணமாக்கும்.

* ஆப்பிள் மற்றும் பப்பாளிச் சாற்றை முகத்தில் பூச வேண்டும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும். வாரம் இருமுறை இதைச் செய்ய வேண்டும். ஒரு டீஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாற்றை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கி, பருத்தொல்லை அகலும்.

* எக்காரணம் கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

விமர்சனம்: 12th Fail!

கேரள குண்டுவெடிப்பு: உடனே வெளியேறிய கார்… சிசிடிவி காட்சிகளை ஆராயும் போலீஸ்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *