பேலியோ, கீடோ போல அவ்வப்போது புதிய டயட் முறைகள் வலம் வருகின்றன. இந்த வரிசையில் தற்போதைய டிரெண்ட்… `புத்தா பௌல்’ (Buddha Bowl). இந்த உணவுமுறையின் பெயரை அப்படியே தமிழுக்கு மொழிமாற்றம் செய்தால் `புத்தரின் கிண்ணம்’ என்று பொருள் வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த டயட்டின் பெயர் சற்று ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.
அதென்ன `புத்தா பௌல்?’ யாரெல்லாம் இந்த டயட்டை எடுத்துக்கொள்ளலாம் என்று விளக்குகிறார்கள் உணவியல் நிபுணர்கள்…
”இந்த `புத்தா பௌல்’ டயட் என்பதை எளிமையாகத் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கிண்ணத்தில் அல்லது தட்டில் நம் உடலுக்குத் தேவையான சத்துகளை சரியான அளவில் எடுத்துக்கொள்வது எனலாம். மேலும், இந்த உணவுமுறையைத் தாவர அடிப்படையிலான உணவுமுறை (Plant based diet) என்றும் கூறலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் உணவுக் கலாச்சாரம் தற்போது பரவி வருகிறது. இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுமுறைகளால் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்களால் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்ட வாழ்வியல் நோய்களால் பாதிக்கப்படுகிறோம். இதைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கு `புத்தா பௌல்’ டயட் உதவும்.
இந்த உணவுமுறை கார்போஹைட்ரேட் உடலில் சேர்வதைக் குறைத்து எடைக்குறைப்புக்கு உதவுகிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த டயட்டை நிபுணர்களின் ஆலோசனை பெற்றுப் பின்பற்றலாம். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. இந்த உணவு முறையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்றலாம்.
நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு 100% என்று வைத்துக்கொள்வோம். அதில் முழுத் தானியங்கள் 25%, பருப்பு மற்றும் பயறு வகைகள் 25%, காய்கறிகள் 50% என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த விகிதத்தில் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். தானியங்களை மாவாக எடுத்துக்கொள்வதைக் காட்டிலும் முழுத் தானியங்களாக எடுத்துக்கொள்வது நல்லது.
அரிசி, கோதுமை, சம்பா கோதுமை, கேழ்வரகு, திணை, கம்பு, சாமை போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். புரதச்சத்துக்காக பயறு மற்றும் பருப்பு வகைகளை எடுத்துகொள்ள வேண்டும். காய்கறிகளை சமைத்தோ பச்சையாகவோ சாப்பிடலாம். சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகளான ரவை, சேமியா, மைதா, சோளமாவு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இந்த டயட்டில், சிம்பிள் சுகர் (simple sugar) எனப்படும் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றை உட்கொள்ளுதலைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்ப் பயன்பாட்டையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
`புத்தா பௌல்’ என்பது சைவ உணவு சார்ந்த டயட் என்பதால் முடிந்தவரை அசைவ உணவுகளை இதில் எடுத்துக்கொள்ள வேண்டாம். அசைவ உணவைத் தவிர்க்க முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு, மூன்று நாள்கள் இந்த உணவு முறையைப் பின்பற்றலாம்.
ஆரோக்கியமான உணவுகள் சுவையாக இருக்காது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆரோக்கியமான உணவை சுவையானதாகவும், புதுமையானதாகவும் மாற்றிச் சாப்பிடலாம். உதாரணத்துக்கு, பீட்ரூட்டைத் துருவி, அதில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தைச் சேர்த்துப் பிசைந்து, பாதாம், பிஸ்தா சேர்த்து அல்வா போன்று சாப்பிடலாம். வடை சாப்பிட வேண்டும் என்றால், பச்சைப்பயற்றை ஊற வைத்து அரைத்து டிக்கி (Tikki) போன்று செய்து சாப்பிடலாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: காளான் பிரியாணி!
கிச்சன் கீர்த்தனா: ஈஸி சிக்கன் பிரியாணி!