ஜூபைருக்கு எதிராக தமிழ்நாடு சைபர் க்ரைம் புகாரா?: உண்மை நிலவரம்!

இந்தியாவில் உண்மைச் சரிபார்ப்பு (FactCheck )செய்தி வெளியிடும் முகமது ஜுபைருக்கு எதிராக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் ட்விட்டரில் புகாரளித்தனரா? அதன் உண்மை நிலவரம் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனரான முகமது ஜுபைர் நேற்று (நவம்பர் 04) ஒரு பரபரப்பான ட்வீட்டை வெளியிட்டு இருந்தார்.

அதில், “ட்விட்டரில் இருந்து ஒரு மின்னஞ்சல் கிடைத்தது. எனது தொடர் ட்வீட் தொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரிடம் இருந்து ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒரு கோரிக்கை வந்துள்ளது.

எனது உண்மை சரிபார்ப்பு ட்வீட்கள் இந்தியாவின் தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம், 2000ஐ மீறுவதாக அவர்கள் கூறுகிறார்கள்” என்று தெரிவித்து இருந்தார்.

ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து வந்த மின்னஞ்சலில் ஜூபைரின் முந்தைய சில ட்வீட்களின் யுஆர்எல்-கள் குறிப்பிடப்பட்டு, “இந்த கோரிக்கையின் விளைவாக தற்போது புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கத்தின் மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்கள் பயனர்களின் கணக்கிலிருந்து உள்ளடக்கத்தை அகற்ற, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து (சட்ட அமலாக்கம் அல்லது அரசு நிறுவனம் போன்றவை) சட்டக் கோரிக்கையைப் பெற்றால், அவர்களுக்கு அறிவிப்பது எங்கள் கொள்கையாகும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

வழக்கமாக போலி செய்திகளை சரிபார்த்து உண்மைகளை வெளியிடும் இணைய தள பக்கத்தின் நிறுவனரான முகமது ஜூபைருக்கு இது ஒன்றும் புதிதல்ல.

என்றாலும், போலிச் செய்திகளை கண்டறிந்து பதிவிட்ட பதிவை எப்படி தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸ் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவை மீறுவதாக தெரிவிக்கலாம்? என்று சமூக வலைதளங்களில் தமிழ்நாடு சைபர் க்ரைமுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

வெறுப்பை தூண்டும் போலி வீடியோ!

கடந்த செப்டம்பர் மாதம் பேஸ்புக்கில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ”ஒரு முஸ்லீம் மதகுரு இந்துப் பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்தது போன்றும், அவர் இந்து ஆர்வலர்களால் கையும் களவுமாக பிடிபட்டது போன்றும் இடம்பெற்றிருந்தது.

இதனை தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த கிஷோர் கே.சுவாமி ட்வீட் செய்திருந்தார். இதற்கு முன்பே தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக கிஷோர் கே. சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கூட கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கிஷோர் கே. சுவாமி சமூகவலைதளத்தில் தவறான கருத்து பதிவிட்டதாக அவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

tamilnadu cybercrime police against Mohammed Zubair
கிஷோர் கே. சுவாமி

இந்நிலையில் வீடியோவின் உண்மையைச் சரிபார்த்த முகமது ஜுபைர் கடந்த செப்டம்பர் 16ம் தேதி, ’அது வலதுசாரிகளால் பரப்பப்பட்ட பொய்யான, சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதையும், அதனை மத வெறுப்பை தூண்டுவதற்காக பாஜகவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சில ஊடகங்கள் இந்த வீடியோவை பரப்புவதாகவும், ஆதாரத்துடன் கூறினார்.

சைபர் கிரைம் போலீசார் புகார்!

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மேற்கூறிய ஸ்கிரிப்ட் வீடியோவை நீக்க கோரி ட்விட்டர் நிறுவனத்திடம் தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

கிஷோர் கே சுவாமியின் போலி செய்தியை வைத்து மத வெறுப்பை தூண்டும் அந்த வீடியோவை நீக்கும் முயற்சியில், அந்த வீடியோவை இந்தியாவில் பதிவிட்ட அனைவருக்கும் இமெயில்(email) சென்றுள்ளது. இப்படிதான், அதை Fact check செய்வதற்காக பதிவிட்ட ஜூபைருக்கும் ட்விட்டரில் இருந்து மெயில் சென்றுள்ளது.

tamilnadu cybercrime police against Mohammed Zubair

ஜூபைருக்கு பதிலளித்த நிதியமைச்சர்!

இதற்கிடையே முகமது ஜூபைரின் ட்வீட்டுக்கு நேற்று மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்:

அதில், “குறிப்பிட்ட உங்கள் கணக்குக்கு எதிராக எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. பல உள்ளடக்கங்களுக்கு எதிராக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது எனது புரிதல். அனைத்து ட்வீட் மற்றும் ரீ ட்வீட்டுகள், உண்மை சரிபார்ப்பு பதிவுகளும் திரையில் தெரிகிறது. இதுகுறித்த விளக்க அறிக்கை விரைவில் வெளிவரலாம் என்று கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களை தவறாக வழிநடத்துபவர்களை குறிப்பிட்டேன்!

இதனை தொடர்ந்து ஜூபைர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் போலியான செய்திகள் அல்லது தவறான உள்ளடக்கத்தை பரப்புபவர்களின் ஸ்கிரீன்ஷாட்களை எடுத்ததுதான் நான்கைந்து ட்வீட் போட்டிருந்தேன்.

சரிபார்க்கப்பட்ட கணக்குகள்(blue tick) கொண்டவர்களை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பெரும்பாலானவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். வீடியோவை ட்வீட் செய்தவர்கள் சமூக ஊடக செல்வாக்கு மிக்கவர்கள். நான் அவர்களின் ட்வீட்களை மேற்கோள் காட்டினேன்.

இந்த தவறான சித்தரிப்புக்காகவும், வகுப்புவாத நிறத்தை கொடுத்து மக்களை தவறாக வழிநடத்துவதற்காகவும் அவர்களை குறிப்பிட்டேன். எல்லோரும் உண்மையை புறக்கணித்தார்கள், நான் அதைச் சுட்டிக்காட்டினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க..!

ஆலயங்களில் அறிவாலயங்களை எழுப்புவோம்! – பகுதி 4

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts