பியூட்டி டிப்ஸ்: ‘எவர்கிரீன் இளமை’ சாத்தியமா?
‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னைவிட்டுப் போகலை!’ – ‘படையப்பா’ திரைப்படத்தில், ரஜினியைப் பார்த்து ரம்யா கிருஷ்ணன் சொல்லும் இந்த வசனம், இன்றளவும் பிரபலம். ‘சினிமாக்காரங்க தங்களை இளமையா வெச்சுக்க நிறைய செலவழிப்பாங்க. நமக்கு இதெல்லாம் சாத்தியப்படுமா’ என்பது பெரும்பாலானோரின் வாதம்.
உண்மையில், “இளமை என்பது வெளித்தோற்றத்தை மட்டுமே சார்ந்தது கிடையாது. ஸ்மார்ட்டாகவும் நேர்மறையாகவும் சிந்தித்துச் செயல்படுவதும், வயதைப் பொருட்படுத்தாத எனர்ஜியும்தான் இளமையைத் தீர்மானிக்கின்றன” என்கிறார்கள் ஆன்டி ஏஜிங் ஆலோசகர்கள்.
“ஒரு செடி… மரமாகி, கனிகள் கொடுத்து, குறிப்பிட்ட காலத்தில் தன் இயக்கத்தைக் குறைத்துக்கொள்வது போலத்தான் மனிதர்களின் உடல் வளர்ச்சியும். பரிணாம வளர்ச்சி மற்றும் வயதுக்கேற்ப நம் உடல் வளர்ச்சியில் மாறுபாடுகள் ஏற்படும். இதில், உணவு, வாழ்வியல் பழக்கவழக்கங்கள், ஆரோக்கியம், மன அமைதி, மரபணு போன்ற பல காரணிகளைப் பொறுத்தே நம் தோற்றமும் வாழக்கூடிய காலமும் மாறுபடுகின்றன.
உடலுக்கான பிரதான ஆற்றல் நாம் உட்கொள்ளும் உணவின் மூலமே கிடைக்கிறது. ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்களுக்கு’ என்பதை முன்னோர்கள் முறையாகப் பின்பற்றினார்கள். வெளி உணவை எப்போதாவதுதான் அவர்கள் சாப்பிட்டார்கள். நம்மில் பலரும் தினமும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். இதனாலும், உடலுக்குத் தேவையான, ஆரோக்கியமான உணவைவிட தேவையற்ற மற்றும் மிகையான உணவைச் சாப்பிடுவதாலும், ஆரோக்கிய கேடுக்கான சூழலை விலை கொடுத்தே வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
பசிக்கும்போது சாப்பிடுவது, அளவான சாப்பாடு, வீட்டுச் சாப்பாடு, ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே போதிய இடைவெளி விடுவது… இதையெல்லாம் சரியாகக் கடைப்பிடித்தால், உணவுக் கட்டுப்பாடு என்பதே தேவைப்படாது. ஆனால், வேலை மற்றும் வாழ்வியல் முறை மாறுபடுவதால், பலருக்கும் டயட் அவசியமாகிறது. கெடுதல் ஏற்படுத்தும் உணவைச் சாப்பிடுவதும், நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவதும், உடல் இயக்கத்தை பாதித்து, ஆரோக்கியமற்ற சூழலின் வெளிப்பாடாக வயோதிக பாதிப்புகள் விரைவாகவே ஏற்படக் கூடும்.
உடற்பயிற்சி எல்லோருக்கும் அவசியமானது. இல்லாவிட்டால், குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர், தசைகளில் சுருக்கம் அல்லது தளர்வு ஏற்படக்கூடும். பூப்பெய்தும் தருணம், கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்துக்குப் பின்னர், மெனோபாஸ் நேரம் மற்றும் அதற்குப் பிந்தைய சில ஆண்டுகள் வரை… உணவு, தூக்கம், சந்தோஷம், மன அமைதி என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எல்லா பாலினத்தவர்களுமே, அந்தந்தப் பருவத்தில் உடலையும் மனதையும் சரியாகப் பார்த்துக் கொள்ளத் தவறினால், பிற்காலத்தில் ஏஜிங் சார்ந்த பின்விளைவுகளைச் சீக்கிரத்திலேயே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வயோதிகத்திலும் இளமைத் துடிப்புடன் நாம் வாழும் வாழ்க்கைக்கான அர்த்தம் உணர்ந்து செயல்பட்டாலே, முதுமை, வயோதிகம், கவலைகளைப் பொருட்படுத்தாமல், அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்.
வெளிப்புற அழகைத் தீர்மானிப்பதில், மேக்கப் விஷயங்களுக்குப் பெரும் பங்குண்டு. அவரவர் சருமத்துக்கு ஏற்ற தரமான அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவது சரியே. அதைவிட முக்கியம், துறை சார்ந்த வேலைக்கு ஏற்ப நேர்த்தியாக உடை அணிவது, சிகை அலங்காரம், நேர்த்தியான பேச்சு மற்றும் அணுகுமுறை போன்றவையும் நம்மை இளமையாகக் காட்சிப்படுத்தும்” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரஜினி – விஜய் உடன் போஸ் கொடுக்கும் கவின்: ஸ்டார் படத்தின் அப்டேட்!
மகேஷ் பாபுவின் “குண்டூர் காரம்” செகண்ட் சிங்கிள் அப்டேட்!
அடுத்த வருஷம் போகலாம்: அப்டேட் குமாரு
போஸ் கொடுக்கும் துரைமுருகனே வெள்ளத்துக்கு காரணம்: கராத்தே காட்டம்!