கோடை வெப்பத்தின் காரணமாக, அதிகமாக வியர்க்கும். அந்த வியர்வையானது சரியாக வெளியேறாமல், சருமத்தின் அடியில் தேங்கிவிடுவதாலேயே வியர்க்குரு வெளிப்படுகிறது.
ஆரம்பத்தில் சின்னச் சின்னதாகப் பொரிப்பொரியாகத் தோன்றி, பிறகு அதில் அரிப்பு, எரிச்சல் சேர்ந்துகொள்ளும். சிலருக்கு காய்ச்சலும் வரலாம்.
வியர்க்குரு பாதிப்பானது சின்னக் குழந்தைகளுக்கு மிகவும் சகஜமாக வரக்கூடியது. குறிப்பாக, குழந்தைகளின் சருமம் முதிர்ச்சியடைந்திருக்காது. சருமத் துவாரங்கள் மிக நுண்ணியதாக இருக்கும்.
அதனால் வியர்வை எளிதில் தேங்கி வியர்க்குருவாக வெளிப்படுகிறது. அதிலும் குறிப்பாக அக்குள், இடுப்பு, முதுகு போன்ற பகுதிகளில் இது அதிகம் வருவதைப் பார்க்கலாம்.
வியர்க்குருவை விரட்டுவதாகச் சொல்லி விளம்பரப்படுத்தப்படும் பவுடர்கள் நிறைய பார்க்கிறோம். மென்த்தால், கற்பூரம் போன்றவை எல்லாம் இருப்பதாகச் சொல்லி அவற்றை விளம்பரப்படுத்துவார்கள்.
அதைத் தடவும்போது குளுகுளுவென உணரச் செய்வதால் இதமாக இருக்கும். ஆனால், உண்மையில் அந்த பவுடரே சருமத் துவாரங்களை அடைத்துவிடுவதால் வியர்க்குரு இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது. அப்போது வியர்க்குருவை விரட்ட என்னதான் தீர்வு..?
வெயில் காலத்தில் இருமுறை குளிக்க வேண்டும். ஒரு பக்கெட் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பசோடா சேர்க்கவும். சோப்பை நேரடியாக சருமத்தில் வைத்துத் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
மென்மையான டவலை சிறியதாகக் கத்தரித்து, நீரில் நனைத்து, சோப்பில் தொட்டு, அதை வைத்தே சருமத்தைத் தேய்த்துக் குளிக்க வேண்டும். குளித்து முடித்ததும் மறுபடி டவலை வைத்து உடலை அழுத்தித் தேய்க்கக் கூடாது. லேசாக ஒற்றி எடுக்க வேண்டும்.
வியர்க்குரு பாதிப்பு உள்ளவர்கள் காட்டன் உள்ளாடைகள் மற்றும் உடைகளை மட்டுமே அணிய வேண்டும். வியர்க்குருவால் அரிப்பு அதிகமாக இருந்தால் ஐஸ் தண்ணீரில் நனைத்த துணியால் லேசாக ஒற்றி எடுக்கலாம்.
வேறு க்ரீமோ, லோஷனோ தேவையில்லை. அரிப்பு மிக அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு ஆன்டிஹிஸ்டமைன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.
இப்படிச் செய்தாலே பத்து, பதினைந்து நாட்களில் வியர்க்குரு தானாகச் சரியாகிவிடும். அதைத் தேய்ப்பதோ, சொரிவதோ கூடாது.
சிலர் வியர்வை மற்றும் வியர்க்குருவிலிருந்து தப்பிக்க உடல் முழுவதும் டால்கம் பவுடர் தடவிக் கொள்வார்கள். டால்கம் பவுடரில் உள்ள சிலிக்கானை சுவாசிக்கும்போது, அது நுரையீரலுக்குள் போய் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வீஸிங், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் வரலாம்.
அந்தரங்க உறுப்பில் பவுடர் போடும்போது அது சினைப்பை புற்றுநோயைக்கூட ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் சொல்வதால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : புடலங்காய் ராய்த்தா
இது ‘கச்சத்தீவு’ டைவர்சன் : அப்டேட் குமாரு
MS Dhoni: தோனிக்கு மீண்டும் காயமா? வெளியான அதிர்ச்சி வீடியோ!
சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு பாதுகாப்பு வேண்டுமா?: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி!