ஃபிரெஞ்ச் பிரைஸ் முதல் பீட்சா வரை துரித உணவுகளுடன் இணைந்துகொள்ளும் ஒரு பொருள் சீஸ். பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால் சீஸ் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பலரிடம் உள்ளது. இந்த நிலையில் தினமும் சீஸ் சாப்பிடலாமா என்பது பற்றி விளக்குகிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள். eat cheese every day
“வெப்பமண்டல நாடான இந்தியாவில் நம்முடைய உணவுப் பழக்கத்தில் சீஸ் என்பதே கிடையாது. குளிர் பிரதேசங்களில் உள்ள தட்ப வெப்பநிலைக்கும், உணவுப் பழக்கத்துக்கும் சீஸ் ஏற்றதாக உள்ளது. எனவே நம்நாட்டில் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. பத்து நாள்களுக்கு ஒருமுறை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினை, இதயம் சார்ந்த பிரச்சினை, உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அதேபோல துரித உணவுகளுடன் சீஸ் சேர்த்துச் சாப்பிடுவது நல்லதல்ல. eat cheese every day
துரித உணவுகள் பெரும்பாலும் மைதாவில் தயாரிக்கப்பட்டவையாகவும், அதிக எண்ணெயில் சமைக்கப்பட்டதாகவும் இருக்கும். அவற்றுடன் சீஸையும் எடுக்கும்போது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
நாம் கடைகளில் வாங்கும் க்யூப், ஸ்லைஸ்டு சீஸ் (sliced cheese) எல்லாம் புராசெஸ் செய்யப்பட்டவை. புராசெஸ்டு சீஸில் கூடுதலாக கொழுப்புச்சத்து, நிறமி, சில நேரங்களில் சுவையைக் கூட்டுவதற்கான விஷயங்களும் சேர்க்கப்படும். சீஸின் ஆயுளை அதிகரிப்பதற்காக உப்பு, பிரிசர்வேட்டிவ் போன்றவை அதிகமாகச் சேர்க்கப்படும்.
இந்தியாவில் 80 சதவிகிதத்துக்கும் மேல் இந்த வகைதான் கிடைக்கிறது. பிற சீஸ் வகைகளைவிட புராசெஸ் செய்யப்பட் சீஸின் விலை குறைவு என்பதாலும் இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, புராசெஸ் செய்யப்பட்ட சீஸை முடிந்தவரை தவிர்க்கலாம். பிற சீஸ் வகைகளை குறைவான அளவு அவ்வப்போது எடுத்துக்கொள்வதில் தவறில்லை” என்கிறார்கள்.