ஊடகங்களில் வெளியாகும் பியூட்டி டிப்ஸ்களைப் படித்துவிட்டு, சிலர் சமைக்கும்போது, சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களில் எதையாவது எடுத்து முகத்தில் தடவிக் கொள்வார்கள். உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சைச் சாறு, தயிர், புதினா சாறு… இப்படி எதையும் விட்டு வைக்க மாட்டார்கள்.
இவை எல்லாமே சரும ஆரோக்கியத்துக்கு உதவும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கும். இந்த விஷயம் எந்த அளவுக்குச் சரியானது… சமையலுக்கான அனைத்துப் பொருட்களையும் நேரடியாக சருமத்தில் தடவுவது நல்லதா? கெட்டதா? சருமநல மருத்துவர்கள் சொல்லும் பதில் என்ன?
“சமையலுக்கான பொருட்களை முகத்தில் தடவிக் கொள்வது நல்லதா, கெட்டதா என்று கேட்கும் நிலையில் சிறுநீரை முகத்தில் தடவினால், சருமத்தின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும் என்றொரு நம்பிக்கை பரவிக்கொண்டிருக்கிறது. அதை நம்பி, பலரும் தங்களது சிறுநீரையே முகத்தில் தடவிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட விநோதங்களும் இங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
யூரியா என்பது நீர்ச்சத்துக்கு காரணமானது. குறிப்பிட்ட சதவிகிதம் யூரியா உள்ள கான்சென்ட்ரேஷன், நம் சருமத்தின் ஈரப்பதம் குறையாமல், அதைத் தக்க வைக்கும். அதையும் இதையும் பொருத்திப் பார்த்து, தங்களது சிறுநீரையே மாய்ஸ்ச்சரைசராக உபயோகிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது.
எனவே, எல்லா பொருட்களும் நம் சருமத்துக்குப் பொருத்தமானவை என்று சொல்ல முடியாது. இப்படி ஒவ்வாத பொருட்களால் ஏற்படும் அலர்ஜியை சரும மருத்துவத்தில், ‘அலர்ஜிக் கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்’ (Allergic contact dermatitis) என்று சொல்வோம்.
எலுமிச்சைப்பழம், புளி, கிராம்பு போன்றவற்றில் இயல்பிலேயே ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை இருக்கும். எனவே, இப்படி உள்ளுக்குச் சாப்பிடுகிற எல்லாவற்றையும் சருமத்தில் அப்ளை செய்வது ஆரோக்கியமான விஷயமல்ல.
சருமத்தின் அழகையும் இளமையையும் தக்கவைக்க வேண்டுமானால், நிறைய காய்கறிகள், பழங்களை உள்ளுக்குச் சாப்பிடுங்கள். அவற்றையெல்லாம் சருமத்துக்குப் பயன்படுத்தி, சிக்கலை வரவழைத்துக் கொள்ளாதீர்கள். சருமப் பராமரிப்பு என்ற விஷயத்தை எளிதாக வைத்துக் கொள்ளுங்கள்.
உள்ளே சாப்பிடும் காய்கறி, பழங்களில் ஒன்றிரண்டு வேண்டுமானால் பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அவையும் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று அர்த்தமில்லை. சருமத்தில் அப்ளை செய்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாதவை என்று புரிந்துகொள்ளுங்கள். அந்த வகையில் தயிர், தேன், ஓட்ஸ் போன்றவற்றை சருமத்தில் தடவிக்கொள்வதால் பிரச்சினைகள் வராது.
ஒரு ஃபேஸ்பேக்கோ, ஆயில் மசாஜோ செய்துகொண்டு காத்திருக்கும் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ உங்களுக்கு ஒருவித ரிலாக்ஸிங் மனநிலையைத் தரும்பட்சத்தில் அவற்றைச் செய்து கொள்ளலாம். அந்த நல்ல உணர்வுக்காக இப்படிப்பட்ட வீட்டு சிகிச்சைகளை வாரம் ஒரு முறையோ, பத்து நாள்களுக்கு ஒரு முறையோ செய்து கொள்ளலாம்.
மற்றபடி அவை பலன் தரும் என்று நம்பாதீர்கள். அப்படி உங்கள் மனநிலைக்காக நீங்கள் தேர்வுசெய்கிற பொருட்களும் பாதுகாப்பானவையாக இருக்கட்டும். எலுமிச்சை, புதினா என கிடைக்கும் எல்லாவற்றையும் சருமத்தில் தடவாதீர்கள்” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நாவல் பழ அல்வா
தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி ஏழைகளிடம் அபராதம் வசூலிப்பதா?: ராகுல் காட்டம்!
யுபிஏ ஆட்சியில் எல்லா மாநிலங்களின் பெயர்களையும் சொன்னீர்களா?: நிர்மலா சீதாராமன் கேள்வி!