விதவிதமான ஷாம்பூகள் விற்பனையில் இருந்தாலும் வெறும் சீயக்காயை அரைத்து வைத்துக்கொண்டு, தலைக்குக் குளிப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி வெறும் சீயக்காய்த்தூள் மட்டும் பயன்படுத்துவது நல்லதா? சீயக்காயுடன் வேறு பொருள்கள் சேர்க்க வேண்டுமா?
வெறும் சீயக்காய்த்தூள் மட்டும் உபயோகித்தால், கூந்தல் வறண்டு போகும். அதனால் ஒரு கிலோ சீயக்காய்க்கு, அரை கிலோ வெந்தயம், அரை கிலோ பயத்தம்பருப்பு (முழுதாக இருக்கும் பச்சைப்பயறு உபயோகிக்க வேண்டாம்), 100 கிராம் பூலாங்கிழங்கு, 50 கிராம் பூந்திக்கொட்டை, வாசனை வேண்டுமென்றால் வெட்டிவேர் 10 கிராம் ஆகியவற்றை வெயிலில் காயவைத்து, மெஷினில் கொடுத்து அரைத்து வாங்கவும். இப்படி அரைக்கும் சீயக்காய்த்தூள், எல்லா வகையான கூந்தலுக்கும் ஏற்றது. இதில் புரதச்சத்து, கண்டிஷனர் இரண்டுமே உள்ளன. மிகச் சிறந்த வாஷாகவும் இருக்கும். வெந்தயம் சேர்ப்பதால் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
பொதுவாக சீயக்காய் உபயோகிப்பதாக இருந்தால், எண்ணெய் வைத்து சிறிது நேரம் ஊறிக் குளிப்பது சிறந்தது. ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பலருக்கும் அதற்கு நேரமோ, பொறுமையோ இல்லை.
மேற்குறிப்பிட்ட காம்பினேஷனில் சீயக்காயை அரைத்து வைத்துக்கொண்டால், எண்ணெய் வைக்காமலும் தலையை அலசலாம். வெறும் சீயக்காய் பயன்படுத்தும்போது ஏற்படும் கூந்தல் வறட்சி இதில் இருக்காது. கூந்தல் மென்மையாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஷக்கர்கந்தி (சர்க்கரைவள்ளிக் கிழங்கு) சாட்
INDvsAUS : இறுதிப்போட்டியில் தோல்வி ஏன்?: ரோகித் சர்மா பேட்டி!