பாதங்களில் வலி எடுத்தால் ‘வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால் சரியாகிவிடும்’ என்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை…. எல்லோருக்கும் ஏற்றதா?
“வெந்நீரில் கால்களை வைப்பதால் உண்மையிலேயே பலன் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்கும். பாதங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வலி குறையும். பாத வலிக்கு கால்களை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருக்கும் வழக்கம் பல வருடங்களாக நாம் பின்பற்றும் சிகிச்சை தான். வெந்நீரில் கூடுதலாக சில விஷயங்களைச் சேர்க்கும்போது பலன்கள் இன்னும் அதிகரிக்கும்.
சாதாரணமாக, நாம் உப்பு சேர்த்த வெந்நீரில் கால்களை வைத்திருப்போம். உப்பு, கிருமி நாசினியாகச் செயல்படுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். மருந்துக் கடைகளில் எப்சம் சால்ட் என ஒன்று கிடைக்கும். அது தசைகளைத் தளர்த்தி, நல்ல தூக்கத்தையும் வரவழைக்கும்.
அதே வெந்நீரில் கிருமி நாசினி சேர்த்து, கால்களை ஊற வைத்தால், மழைக்காலத் தொற்றுகளில் இருந்து காக்கும். எனவே, அளவோடு செய்வதன் மூலம் வெந்நீர் சிகிச்சை அற்புதமான பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
அதே சமயம் அப்படிச் செய்யும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர் எனில், வெந்நீரில் கால்களை வைப்பதற்கு முன்பு உங்கள் உணர்ச்சி நரம்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று கவனியுங்கள். அடுத்து, கால்களில் ஏதேனும் புண்களோ, தொற்றோ இருந்தாலும் வெந்நீரில் கால்களை வைக்கக்கூடாது. Is heat therapy good for foot pain?
ஒருவேளை ஏதேனும் தொற்று ஆரம்ப நிலையில் இருந்தால், வெந்நீரில் கால்களை வைக்கும்போது, சருமத்தின் வழியே அது பரவ வாய்ப்பு உண்டு. அடுத்தது, வெந்நீரானது, உங்கள் கை பொறுக்கும் அளவு சூட்டில் இருக்க வேண்டும். அதாவது, 36 முதல் 38 டிகிரி வெப்பம் சரியானது. ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் வெந்நீரில் கால்களை வைக்கக்கூடாது. அதற்கு மேல் வைத்தால் கால்கள் வீங்கலாம்.
இதையெல்லாம் தாண்டி, உங்களுக்கு கால் வலி பல நாள்களாகத் தொடர்கிறது என்றால், வெந்நீர் சிகிச்சையை மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்காமல், மருத்துவரை அணுகி, வலிக்கான காரணம் அறிந்து சரியான சிகிச்சையை மேற்கொள்வதுதான் சரியானது என்கிறார்கள் வலி நிர்வாக மருத்துவர்கள்,