இன்ஸ்டாகிராம் செயலி நேற்று (செப்டம்பர் 22) இரவு முடங்கியதால் நெட்டிசன்கள் பலர் ட்விட்டருக்கு படையெடுத்து இன்ஸ்டாகிராம் டவுன் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை உலகில் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
2010ல் தொடங்கப்பட்ட இந்த சமூக வலைதளத்தை 1.440 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
உலகளவில் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் 4ஆவது இடத்தில் உள்ள இன்ஸ்டாகிராமை இந்தியாவில் தான் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர்.
263.8 மில்லியன் பயனர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் 153.6 மில்லியன் எண்ணிக்கையுடன் அமெரிக்காவும், 119.6 மில்லியன் எண்ணிக்கையுடன் பிரேசிலும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
இன்ஸ்டாகிராம் செயலியை மொத்தம் பயன்படுத்துவோரில் 47.2 சதவிகிதம் பேர் பெண்கள். 52.8 சதவிகிதம் பேர் ஆண்கள்.
இதில் 18 – 24 வயதுடையவர்கள் தான் அதிகம் (31.2% – 446.4 மில்லியன்) இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். 25- 34 வயதுடையவர்கள் 30.0 சதவிகிதம், அதாவது 433.7 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 22) இரவு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இன்ஸ்டாகிராம் செயலி முடங்கியது.
இதனால் இன்ஸ்டாகிராம் பயனர்களால் லாக் இன் செய்ய முடியவில்லை, குறுஞ்செய்திகளை அனுப்பவும், புகைப்படங்களைப் பகிரவும் முடியாமல் சிரமப்பட்டனர்.
பயனர்கள் பலருக்கும் ஏன் இன்ஸ்டாகிராம் செயல்படவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டது. நெட்வொர்க் வேலை செய்ய வில்லை என கருதி பலரும் அடிக்கடி ஏரோபிளான் மோடை ஆன் ஆஃப் செய்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் ட்விட்டருக்கு படையெடுத்தனர். இன்ஸ்டாவுக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பி, ‘#instagramdown’ என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டனர்.
இதனால் அந்த ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டானது. இன்ஸ்டாகிராம் தொடர்பான பல மீம்ஸ்களும் ட்விட்டரை ஆக்கிரமித்தன.
இந்நிலையில் செயலி டவுனாக இருப்பதைக் கண்டறிந்த இன்ஸ்டாகிராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது.
“சிலருக்கு இன்ஸ்டாகிராமைஅணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு மன்னிக்கவும்” என்று ட்விட் செய்தது.
இந்த ட்வீட்டை வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் மீண்டும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
“நாங்கள் திரும்பி வந்துவிட்டோம். இன்று ஏற்பட்ட பிரச்சினை சரி செய்யப்பட்டது” என்று ட்விட் செய்தது.
இணைய தளங்களின் நிகழ் நேரத் தகவல்களை வழங்கும் ஆன்லைன் தளமான டவுன் டெக்டரின் கூற்றுப்படி, ”இன்ஸ்டாகிராம் வியாழன் அன்று இரவு 9:47 முதல் 11:47 மணி வரை முடங்கியது.
இரவு 10:32 மணிக்கு இன்ஸ்டாகிராம் செயலிழந்துள்ளதாக 30,521 புகார்கள் வந்தன.
இதில் 64 சதவீதம் பேர் செயலியில் சிக்கல் இருப்பதாக தெரிவித்தனர். 24 சதவீதம் பேர் சர்வர் இணைப்பில் சிக்கல் இருப்பதாகவும் 12 சதவீதம் பேர் லாக் இன் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இது போன்ற சமூக வலைதளங்கள் முடங்குவது முதல் முறையல்ல. கடந்த மே மாதம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் செயலிகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா