சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் தனது 105ஆவது வயதில் இன்று (நவம்பர் 5) உயிரிழந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி. 105 வயதான அவர் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூரில் இன்று காலமானார்.
1917ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி இமாச்சல் பிரதேசத்தின் கல்பா என்ற கிராமத்தில் பிறந்த நேகி, அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
முதல் தேர்தலில் முதல் வாக்காளர்!
ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியாவில் முதன்முறையாக 1952ம் ஆண்டில் மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
எனினும் இமாச்சலபிரதேசத்தில் உயரமான பகுதியில் இருக்கும் கின்னூரில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் நாட்டின் பிற பகுதிகளுக்கு 5 மாதங்களுக்கு முன்பே அங்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
அதன்படி கின்னூரில் 1951ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நேகி தனது 34வது வயதில், சொந்த கிராமமான கல்பாவில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்து சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமையை பெற்றார்.
அப்போது முதல் ஒவ்வொரு பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களிலும் நேகி தனது வாக்காளர் கடமையை நிறைவேற்றாமல் இருந்ததே இல்லை.
வரும் 12ம் தேதி நடைபெற உள்ள மாநில சட்டமன்ற தேர்தலுக்காக உடல்நிலை காரணமாக நேரில் செல்ல முடியாத நிலையிலும், கடந்த 2ம் தேதி நேகி தபால் ஓட்டு மூலம் வாக்களித்து தன் கடமையை நிறைவேற்றினார்.
அரசு மரியாதையுடன் உடல் தகனம்!
இந்நிலையில் தேர்தல் நடைபெற்று 3 நாட்களுக்கு பின்னர், இன்று காலையில் 106 வயதான ஷியாம் சரண் நேகி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், குடிமகன் என்ற முறையில் தனது பொறுப்பை நிறைவேற்றி 34வது முறையாக நேகி வாக்களித்ததாகக் கூறினார்.
மேலும் நேகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையரின் பாராட்டு!
கடந்த 2003ம் ஆண்டு கின்னவுர் துணை ஆணையராக நியமிக்கப்பட்ட எம் சுதா தேவி, கல்பாவில் நேகியைச் சந்திக்கச் சென்றார். அப்போது முதல் இந்தியாவின் பிரபலமான வாக்களாராக நேகி ஒவ்வொரு தேர்தலிலும் அறியப்பட்டு வருகிறார்.
அதனை தொடர்ந்து 2012 இல், அப்போதைய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, தேர்தல் ஆணையத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்பாவில் உள்ள நேகியின் வீட்டிற்கு நேரில் சென்று கடமை உணர்வை பாராட்டினார்.
அமிதாப் பச்சனையும் முந்திய நேகி!
பின்னர் 2014ம் ஆண்டு நடந்த பொது தேர்தலின் போது, மாநில தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்ட நேகியை மையமாக வைத்து கூகுள் தனது வாக்களிப்புக்கான உறுதிமொழி பிரச்சாரத்திற்காக ஒரு வீடியோவை உருவாக்கியது.
அது அமிதாப் பச்சன், தியா மிர்சா, அர்ஜுன் ராம்பால் மற்றும் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் போன்ற பிரபலங்கள் இடம்பெற்ற வீடியோ விடவும் நேகியின் வீடியோ சமூகவலை தளங்களில் அதிக பார்வைகளைப் பெற்றது.
கடந்த 2016ம் ஆண்டு வெளியான சனம் ரே என்ற இந்தித் திரைப்படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நேகி நடித்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
சைரஸ் மிஸ்திரி கார் விபத்து: உயிர்பிழைத்தவர் பரபரப்பு வாக்குமூலம்!
ஜூபைருக்கு எதிராக தமிழ்நாடு சைபர் க்ரைம் புகாரா?: உண்மை நிலவரம்!