பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த ‘தாய் ஸ்மைல் ஏர்வேஸ்’ விமானத்தில் இந்திய பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிசம்பர் 26 ஆம் தேதி பாங்காக்கில் இருந்து கொல்கத்தா நோக்கி தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானம் இயக்கப்பட்டது.
அப்போது அந்த விமானத்தில் பயணித்த இந்திய பயணி ஒருவரை சக இந்திய பயணி அவரது நண்பர்களுடன் சேர்த்து தாக்கியது விமானத்தில் இருந்தவர்களிடம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இரண்டு பயணிகள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ஒரு விமானப் பணிப்பெண் அவர்களை அமைதிப்படுத்த முயற்சிப்பதும் என தொடங்கும் அந்த வீடியோவில் ஒரு பயணி , சக பயணியை “கையை கீழே போடு” என்று சொல்லி அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கன்னத்தில் அறைகின்றார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடுத்த முறை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தாய் ஸ்மைல் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் “தாய் ஸ்மைல் ஏர்வேஸ் இதற்காக வருந்துகிறது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப விமான பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் பின்பற்றியதால் இந்த சம்பவம் கவனிக்கப்பட்டது என்பதை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு எங்கள் விமான ஊழியர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் , அந்த விமானப் பணிப்பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்