கேரள ஜோடியின் விநோத செயல்: பாராட்டிய இந்திய ராணுவம்!
நீங்கள் அங்கே நாட்டைப் பாதுகாத்து கொண்டிருப்பதால்தான் நாங்கள் இங்கே மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்கிறோம் என்று இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகத் திருமணங்களுக்கு ஆடம்பர செலவு செய்வது வழக்கமாக இருக்கிறது.
தங்களது பொருளாதாரத்தைக் கூட பொருட்படுத்தாமல் திருமணத்திற்குக் கோடிக்கணக்கில் செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் வித்தியாசமான முறையில் திருமணம் செய்வார்கள்.
விருந்து, மணமக்கள் அழைப்பு, அழைப்பிதழ் என அனைத்திலும் புதுமையைக் கையாள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து அச்சிடப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
கேரள மணமக்கள் ராகுல் – கார்த்திகாவின் திருமணம் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது.
இவர்கள் அச்சடித்த திருமண அழைப்பிதழில், ”உங்களால்தான் நாங்கள் நிம்மதியாக உறங்குகிறோம். எங்களுக்கு மிக மகிழ்ச்சியான நாள்களை அளிக்கும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களால்தான் நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்கிறோம். எங்களுக்கு மிகச் சிறப்பான இந்த நன்னாளில், உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.
இந்த திருமண அழைப்பிதழை, தங்களுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய ராணுவம் “மணமக்களுக்கு வாழ்த்துகளும், திருமண அழைப்பிதழில் நன்றி தெரிவித்திருப்பதற்கு தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.
மேலும் அந்த ஜோடியை பாங்கோடு இராணுவ நிலைய கமாண்டர் பிரிகேடியர் லலித் சர்மா நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“ஒட்டகத்தின் வாய்க்கு சீரகம்”: மோடியை விமர்சித்த கார்கே
ரோஜ்கார் மேளா: சென்னை நிகழ்வில் இந்தியில் பேனர்!