ஐஎம்டிபி இந்திய அளவில் டாப் 10 திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச திரைப்படங்களுக்கு ஐஎம்டிபி ரேங்கிங் கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி டாப்10 திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் போன்ற விவரங்களையும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய அளவில் டாப்10 திரைப்படங்கள் பட்டியலை இன்று(டிசம்பர் 14) ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது.
அதன்படி முதல் இடத்தில் இருப்பது, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்.
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளைத் தொடர்ந்து ஜப்பான் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இரண்டாவது இடத்தில் இருப்பது “தி காஷ்மீர் பைல்ஸ்”. இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்த படத்தை இயக்குநர் விவேக அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார்.
3வது இடத்தில் இருப்பது கேஜிஎஃப்-2. 2018ஆம் வெளியான கேஜிஎஃப் முதல் பாகத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு 2 ஆம் பாகம் வெளியானது. கன்னட நடிகர் யாஷ் நடித்துள்ள இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
4வது இடத்தில் இருப்பது விக்ரம் திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
5வது இடத்தில் காந்தாரா திரைப்படம் இடம்பெற்றுள்ளது. கன்னட மொழியில் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்த இந்த படம் தமிழ் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
6வது இடத்தில் ராக்கெட்ரி தி நம்பி எஃபக்ட். நடிகர் மாதவன் இந்த படத்தை இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கியதன் மூலம் மாதவன் இயக்குநராகவும் அறிமுகமாகியிருந்தார்.
7வது இடத்தில் இருப்பது, இந்தி திரைப்படமான மேஜர். 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இதில் முக்கிய வேடத்தில் நடிகர் அதிவி சேஷ் நடித்திருந்தார்.
8வது இடத்தில் சீதா ராமம் இடம்பெற்றுள்ளது. துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
9வது இடத்தில் இருப்பது கல்கியின் நாவலைத்தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
10வது இடத்தில், 777சார்லி. கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் 777சார்லி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த படம் விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மோனிஷா
சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் விடுவிப்பு!
41 ஆயிரத்தை எட்டும் தங்கம் விலை!