‘நான்ஸ்டிக் பாத்திரங்கள் பொதுவாக ‘டெஃப்லான்’ (Teflon) கோட்டிங்கால் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. கார்பன் மற்றும் ஃப்ளோரின் ஆகிய வேதிப் பொருட்களின் சேர்க்கையே இந்த டெஃப்லான்.
அதிக வெப்பநிலையில் நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது டெஃப்லானில் இருந்து PFAS என்ற நச்சுகளும், மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்களும் வெளியேறுகின்றன. இதனால் உங்கள் உணவின் தன்மை விஷமாகும். எனவே, சமைக்கும்போது என்ன அளவில் வெப்ப நிலையைப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமாகிறது.
170 டிகிரி செல்சியஸுக்கு மேலான வெப்பநிலையில் நான்ஸ்டிக் பாத்திரத்தைப் பயன்படுத்தும்போது அது ஆரோக்கியக் கேடாக மாறலாம். சாதாரண வெப்பநிலையில் நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை’ என்று ஐசிஎம்ஆர் (தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்) சமீபத்தில் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், நான்ஸ்டிக் பயன்படுத்துவோருக்கான ஆலோசனைகளைப் பகிர்கின்றனர் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்…
‘‘நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையாக ஐசிஎம்ஆரின் இந்த வழிகாட்டுதலைப் புரிந்துகொள்ளலாம்.
ஸ்டவ்வில் காலி பாத்திரத்தை வைத்துவிட்டு சிலர் மறந்துவிடுவார்கள். சிலர் சமையலுக்குத் தேவையானதை எடுத்து வைக்கும் முன்னரே பாத்திரத்தை அடுப்பில் காய வைத்துவிடுவார்கள். அவர்களுக்கெல்லாம் இது ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
குறிப்பாக, தோசை சுடுவதற்காகவே அதிகமாக இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். எண்ணெய் ஊற்றத் தேவையில்லை என்பதால் நன்றாக சூடு ஏற்றி தண்ணீர் தெளித்து மாவினை ஊற்றுவார்கள். தோசை சுடச்சுட வேண்டும் என்பதற்காக இதுபோல் பயன்படுத்துகிறோம்.
ஐசிஎம்ஆரின் அறிக்கையின்படி இதுபோன்ற அதிக வெப்பநிலையில் தினந்தோறும் இதுவே வழக்கமான சமையல் முறையாக இருக்கும்பட்சத்தில் ஆரோக்கியரீதியான பல பிரச்னைகள் உருவாக வாய்ப்பு உண்டு.
இந்த எச்சரிக்கையை மனதில் கொண்டு மிதமான சூட்டில் தோசை சுட வேண்டும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தோசைக் கரண்டிகளுக்கு பதிலாக மரக்கரண்டியை தோசை சுட பயன்படுத்தலாம். குழம்பு வைப்பதற்கும் குழி மரக்கரண்டி பயன்படுத்தலாம். அப்போதுதான் பாத்திரங்களில் கீறல், சேதம் உருவாகாமல் இருக்கும்.
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு. 5 முதல் 7 வருடங்கள் வரையிலும் பயன்படுத்தலாம் என்று விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.
சிறிய சேதம் ஏற்பட்டாலும் அந்த நான்ஸ்டிக் பாத்திரத்தை உடனடியாக மாற்றிவிடுவதே நல்லது. ஒருவேளை நான்ஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்க்க விரும்பினால் நம் பாரம்பர்ய முறைப்படியான மண் சட்டி, கல் சட்டி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், இரும்பு பாத்திரங்கள், கண்ணாடியாலான பாத்திரங்கள் பயன்படுத்தலாம்’’ என்கிறார்கள்.
மேலும், “நான்ஸ்டிக் பாத்திரங்கள் கொண்டு சமைக்கும் அறையில் சிறிய புகை போக்கி அல்லது காற்றை வெளியேற்றும் விசிறி (எக்ஸாஸ்ட் ஃபேன்) பயன்படுத்துவது நல்லது.
பாத்திரம் கழுவும்போது டெஃப்லான் கோட்டிங்கில் கீறல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மென்மையான ஸ்பான்ஜ், சுத்தமான தண்ணீர், சோப் கொண்டு சுத்தம் செய்யலாம்” என்று பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்தும் விளக்கமளித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மாங்காய் மோர் பச்சடி
கிச்சன் கீர்த்தனா : மாங்காய் அடை
டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு எதிராக யோகி – அவசர கூட்டம் கூட்டிய மோடி… பாஜகவில் அடுத்த பூகம்பம்!
அதான் பயமா இருக்கு : அப்டேட் குமாரு