பியூட்டி டிப்ஸ்: கண்ணுக்கான அழகு சாதனப் பொருட்கள்… பயன்படுத்துவது எப்படி?

Published On:

| By Minnambalam Desk

கண்களுக்காக அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண்மை இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதால் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. தற்போது கண்களை அழகுபடுத்த காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் என்று எத்தனையோ அழகு சாதனப்பொருட்கள் வந்துவிட்டன. How to use eye cosmetics

இவற்றில் உள்ள ரசாயனப் பொருட்களைக் கணக்கிட்டோம் என்றால் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும். இவற்றைத் தவிர்த்தும் கண்களை வசீகரப்படுத்த முடியாது. எனவே பாதுகாப்பாகக் கண்களை அழகுபடுத்திப் பராமரிப்பது எப்படி என்பதைப் பற்றி அழகுக்கலை நிபுணர்கள் கொடுத்த அழகுக் குறிப்புகள் இதோ…

கண்களுக்கான அழகுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும்போது விலை குறைவாக உள்ள தரம் இல்லாத எந்தவொரு பொருளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது. கடைகளில் இவற்றை வாங்கும்போது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் போன்றவற்றைக் கண்டிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும். குறிப்பாக ஒருவர் பயன்படுத்திய கண் மை, காஜல் போன்றவற்றை மற்றொருவர் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

தினமும் கண்களை அழகுபடுத்திக் கொள்வதில் தவறில்லை. ஆனால் எப்போதும் அழியாமல் இருக்கும் வாட்டர் ஃபுரூப் கண் மை, மஸ்காரா போன்றவற்றைத் தினமும் பயன்படுத்தக் கூடாது. இவை அதிக நேரம் கண்களிலேயே இருக்கும்போது கண் சிவப்பு, வீக்கம் ஏற்படலாம்.

வெளியில் செல்லும்போது இதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்தி கண்களை அலங்கரித்துக் கொள்வோம். அதில் தவறில்லை. ஆனால் இரவு தூங்கச் செல்லும் முன் கண்களை முழுவதுமாகக் குளிர்ந்த நீரில் கழுவி, தூய்மை செய்து விட வேண்டும். இதனால் காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் போன்றவற்றால் கண்களில் ஏற்படும் அழற்சிகளைத் தடுக்கலாம். How to use eye cosmetics

இப்போது கடைகளில் நிறைய மேக்-அப் ரிமூவர்கள் திரவ வடிவத்திலேயே கிடைக்கின்றன. இதில் சில துளிகளைச் சிறிதளவு மென்மையான பஞ்சில் நனைத்து முகத்தையும், கண்களையும் லேசாகத் துடைத்தாலே போதும் நாம் செய்த அலங்காரங்கள் கலைந்துவிடும். விளக்கெண்ணெயையும் மேக்-அப் ரிமூவராக பயன்படுத்தலாம். பிறகு சாதாரண நீரில் முகத்தைக் கழுவிய பின்பு தூங்கச் செல்லலாம். இவ்வாறில்லாமல் கண்களுக்குப் பயன்படுத்திய மையைக் கலைக்காமலேயே தூங்கும்போது கருவளையம், கண் தொற்று போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. How to use eye cosmetics

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share