வெளியில் சுற்றிவிட்டு வந்தாலோ… பதற்றமாக இருந்தாலோ சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டும். அப்படி மூக்கில் ரத்தம் வெளியேறும்போது படபடப்பு, பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும். மூக்கில் இருந்து வெளியேறும் ரத்தத்தைத் துடைத்துவிட்டு, நாசியை நிமிர்ந்திருக்கும்படி சற்று முன்னோக்கி சாய்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
மூக்கின் இரண்டு துளைகளையும் அழுந்தப்பிடித்து, வாய் வழியாக மூச்சு விட வைக்கலாம். அப்போது வாயின் வழியாக ரத்தம் வெளியேறினால், அதை விழுங்காமல் வெளியேற்றி விட வேண்டும். இந்த பொசிஷனில் 5-10 நிமிடங்கள் வைத்திருந்தால், மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறுவது குறையும்.
அதைத் தொடர்ந்து, மூக்கில் இருந்து கசடுகளை வெளியேற்றுவதாக நினைத்து மூக்கை சிந்தக் கூடாது. மாறாக, ரத்தம் வெளியேறுவது குறைந்தவுடன் மூக்கின் மேல் ஐஸ் பேக் வைக்கலாம். இந்த முதலுதவியை முடித்த கையோடு மருத்துவரிடம் சென்று, ரத்தம் வெளியேறியதற்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
மூக்கில் ரத்தம் வருவதற்கு உடற்சூடு, அதிக ரத்த அழுத்தம், மூக்கின் உள்ளே காயம், சில்லு மூக்கு உடைவது எனப் பல காரணங்கள் உள்ளன. ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், ரத்தம் உறைதலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறினால், அது சீரியஸான பிரச்சினை என்ற புரிந்துணர்வுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
குழந்தைகளைப் பொறுத்தவரை, சில்லு மூக்கு உடைவதால் மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது, தானாகவே சில நிமிடங்களில் சரி ஆகிவிடும். என்றாலும், அப்படியே விடாமல் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் முதலுதவி சிகிச்சையாளர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IND vs AFG: சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா அபார வெற்றி!
பியூட்டி டிப்ஸ்: தினமும் தலைக்குக் குளிப்பவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : கள்ளக்குறிச்சி வழக்கு விசாரணை முதல் காங்கிரஸ் போராட்டம் வரை!