சிலருக்கு தினமும் காலை எழுந்ததும், சில குறிப்பிட்ட இடங்களில் அடுக்கடுக்காக தும்மல் வரும். இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு? தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் சொல்லும் பதில் இதோ…
“நம் மூக்கினுள் அந்நியமான ஒரு பொருளோ, அழுக்கோ போகும்போது, அதை வெளியே தள்ள நம் உடல் செய்கிற செயல்தான் தும்மல்.
மூக்கினுள் மியூகோஸா எனப்படும் மெல்லிய சதை இருக்கும். அதற்கு மேல் ரோம செல்கள் இருக்கும். அந்த ரோம செல்கள் தூண்டப்பட்டு, ஹிஸ்டமின் என்ற கெமிக்கலை சுரக்கச் செய்யும். அந்த கெமிக்கல் உடனே நரம்பைத் தூண்டி, நரம்பிலிருந்து மூளைக்கு சிக்னல் செல்லும்.
மூளை ஏதோ ஆபத்து என உடனே அலெர்ட் ஆகி, ட்ரைஜெமினல் நர்வ் என்ற நரம்பைத் தூண்டிவிடும். இந்த நரம்பு தொண்டைப்பகுதியோடும் தொடர்புடையது என்பதால் நம் நாக்குப் பகுதியும் வாயின் பின்பகுதியும் சுருங்கி, மூடிக்கொள்ளும்.
அதன் விளைவாக மூக்கின் பின் பகுதியில் குறைந்த அழுத்தம் உண்டாகும். காற்றானது நுரையீரலில் இருந்து வேகமாக வரும்போது வாய் வழியாகவும் மூக்கின் வழியாகவும் தும்மலாக வெளியே வருகிறது.
வேகமான அழுத்தத்தில் இப்படி காற்று வெளியே வரும்போது அழுக்கு உள்ளிட்ட எதுவும் அடித்துக்கொண்டு வந்துவிடும்.
இந்தத் தூண்டுதல் மீண்டும் மீண்டும் ஏற்படுவதால்தான் அடுக்குத் தும்மல் வருகிறது. உண்மையில், இது ஒருவகையான பாதுகாப்புச் செயல்தான்.
தும்மல் வரும்போது அதை அடக்கும்படி வாயை மூடக்கூடாது. அப்படி மூடினால் மூக்கின் மேல் அழுத்தம் மிகவும் அதிகரித்து ஆபத்தாகலாம்.
உதாரணத்துக்கு, உங்கள் மூளையில் ரத்த நாளங்கள் பலவீனமாக இருந்தால் அவை கிழியவும் கூடும். எனவே, தும்மலை அடக்க முயற்சி செய்ய வேண்டாம். மற்றவரை முகம் சுளிக்கச் செய்யாதபடி லேசாக மூடிக்கொண்டால் போதும்.
தும்மல் வர முக்கிய காரணம் ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி. வீட்டிலுள்ள தூசு, பொடுகு, மகரந்தம், பூச்சிகள் என அலர்ஜியை ஏற்படுத்தும் விஷயங்கள் பல. உணவுகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
இவை தவிர, வானிலை மாறும்போதும் தும்மல் வரலாம். சென்ட் வாசனையோ, ஊதுவத்தி வாசனையோ தும்மலை ஏற்படுத்தலாம்.
குளிர்ந்த நீரில் கை வைத்தால் தும்மல் வரலாம். அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடும்போதும் தும்மல் வரலாம்.
ஒவ்வாமையைத் தூண்டும் இதுபோன்ற விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அப்படியும் குணமாகாதவர்கள், மருத்துவ ஆலோசனையோடு ‘ஆன்டிஹிஸ்டமைன்’ மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.
இது நிரந்தரத் தீர்வல்ல. தும்மல் வராமல் தடுக்க, அலர்ஜியை தடுக்க வேண்டும். எதற்கும் கட்டுப்படாத நிலையில் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியாவில் பத்து பைசா கூட கொடுக்காமல் ரயிலில் போகலாம்? எங்கே?
ஆற்றில் இறங்கி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்: பாலம் அமைக்க வலியுறுத்தல்!