பெண்களின் சருமத்தில் உண்டாகும் மங்கு… முகப் பொலிவைக் குலைப்பதோடு, சிலருக்கு தன்னம்பிக்கையையும் குறைத்துவிடுகிறது. இதைச் சரி செய்ய சில எளிமையான வழிமுறைகளை வீட்டிலேயே பின்பற்றலாம் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.
“சருமத்தில் ஏற்படும் ஒருவகையான கருமை படரும் பிரச்சினையை (Pigmentation) மங்கு என்று அழைக்கிறோம். இதனால் கன்னம், மூக்குப் பகுதி, நெற்றிப் பகுதி, வாயைச் சுற்றிய பகுதி மற்றும் தாடை போன்றவை அடர்ந்த பழுப்பு அல்லது கறுப்பு நிறமாக மாறும்.
மரபு ஒரு காரணமாகலாம். வெயிலில் உடலை அதிகமாக வெளிக்காட்டுவதாலும் மங்கு உண்டாக வாய்ப்புள்ளது. தூக்கமின்மை, மன அழுத்தம், மாதவிடாய் பிரச்னை மற்றும் தைராய்டு சார்ந்த ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவையும் மங்கு வருவதற்கான காரணங்களாக உள்ளன.
மங்கு வரும்போது முதலில் அதன் அளவு மிகச் சிறியதாக இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு பொட்டின் அளவில் இருக்கும். ஏதாவது கெமிக்கல் க்ரீம்களைப் பயன்படுத்தும்போது அது முழுவதுமாக மறைந்து போயிருக்கும். அதேசமயம், அந்த க்ரீம் பயன்படுத்துவதை நிறுத்தும்போது மங்கு பெரிய பெரிய அடர் திட்டுக்களாக முகம் முழுக்கப் பரவும்; மனதளவிலும் அழுத்தம் தரும்.இதைச் சரிசெய்ய ஆயுர்வேதத்தில் சிகிச்சை உள்ளது.
குங்குமப்பூ, ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் மங்குவைச் சரி செய்யும் ஆகச்சிறந்த மருந்து என ஆயுர்வேதம் சொல்கிறது. ஏனென்றால், குங்குமப்பூ ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். ஹார்மோன் சமச்சீரின்மையை சரி செய்யும். இதனால் சருமத்தில் உண்டாகும் மங்கு போன்ற பிரச்சினைகள் சரியாகும். பொலிவையும் நிறத்தையும் மேம்படுத்தும்.
குங்குமப்பூவின் விலை அதிகமாக இருக்குமே, இதை எப்படி தினமும் பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால், சரி செய்வதற்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளோடு ஒப்பிடுகையில் குங்குமப்பூவின் விலை குறைவு.
தினமும் காலையில் இரண்டு இதழ் குங்குமப்பூவை சூடான பாலில் போட்டு ஒரு பத்து நிமிடங்கள் வைத்திருந்து, ஆறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். பால் சாப்பிட விரும்பாதவர்கள், கொதிக்கும் தண்ணீரில் இரண்டு இதழ் குங்குமப்பூவைப் போட்டு பத்து நிமிடங்கள் வைத்திருந்து ஆறியதும் அப்படியே குடிக்கலாம்.
சூடு வேண்டாம் என்று நினைப்பவர்கள் முதல் நாள் இரவே ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு இதழ் குங்குமப்பூவைப் போட்டு ஊற வைத்தும் அடுத்த நாள் காலையில் பருகலாம். இந்த மூன்று வழிமுறையில் எது வசதியாக உள்ளதோ அதை தினமும் பின்பற்றி வரலாம். இவ்வாறு செய்துவரும்போது மங்கு மறைய ஆரம்பிக்கும். முகமும் பொலிவடையும்.
மேல் பூச்சுக்கு.. மஞ்சிஷ்டா என்று சொல்லப்படும் மஞ்சட்டி, அதிமதுரம், வெட்டிவேர் ஆகிய மூன்றின் பவுடரை சமபங்கு அளவுக்கு எடுத்துக் கலந்து ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். காய்ச்சாத பசும்பாலில் பஞ்சைத் தோய்த்து, அதனால் முகத்தை நன்கு துடைத்து சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
பின்னர், கலந்து வைத்துள்ள பொடியை கால் டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, காய்ச்சாத பசும்பாலில் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 10, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைத் தண்ணீரால் கழுவிடுங்கள்.
காலை, மாலை இந்தப் பேக்கை போட்டு வர வேண்டும். 15-வது நாளிலேயே முகத்தில் இருக்கும் மங்கின் அடர்த்தி குறைந்திருப்பதைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு இந்த பேக் நன்றாகச் செயல்படும் தன்மை கொண்டது’’ என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி சாப்ஸ்
டிஜிட்டல் திண்ணை: மகாவிஷ்ணுவை பேசச் சொன்னது யார்? சிக்கிய கல்வி அதிகாரி வாக்குமூலம்!
ஓடும்போதே துண்டாகப் பிரிந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்: பிகாரில் பரபரப்பு!
பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!