இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில், வயது வித்தியாசமின்றி எல்லோரும் எதிர்கொள்கிற ஆரோக்கியப் பிரச்சினை அல்சர். அதிலும் சாஃப்ட்வேர் நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு, இந்தியாவில் இளைஞர்களிடமும் இளம் பெண்களிடமும் வயிற்றில் புண் ஏற்படுவது மிகவும் அதிகரித்துவிட்டது.
விரைவு உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை வண்ண உணவுகள், மேற்கத்திய உணவுக் கலாசாரம் நம்மிடம் புகுந்துகொண்ட பிறகு, காய்ச்சல், தலைவலி போல் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் தொல்லை இயல்பாகிவிட்டது.
இதைத் தவிர்க்க… “நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். உணவுகளும் எளிதாக செரிமானமாகும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாள் ஒன்றுக்கு இரண்டு கப் அளவுக்குச் சாப்பிடுவதால் அல்சர் வராமல் பாதுகாக்கலாம்.
தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோயைக் குணப்படுத்த உதவும்.
எனவே, தயிரை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டு வர, சிறந்த பலன்களைப் பெறலாம்.
திராட்சைப் பழங்களை ஜூஸாக செய்து, வாரத்துக்கு மூன்று முறை அருந்தலாம்.
அவ்வப்போது புதினா ஜூஸ், புதினா துவையல், புதினா சாதம் என ஏதாவது ஒரு வகையில், புதினாவைச் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
வாரத்துக்கு மூன்று நாள்கள், ஒரு டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் தேங்காய்ப்பால் குடித்து வரலாம். ஒரு பெரிய ஸ்லைஸ் தேங்காயை நன்றாக மென்று விழுங்குவது நல்லது.
ஏதாவது ஒருவகையில் கீரையைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முள்ளங்கி, புடலங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
இவையெல்லாமே நம் முன்னோர் நமக்களித்த பாரம்பர்ய உணவு முறைகள்தான்.
ஆனால், இன்றைய சூழ்நிலையில் நமக்குப் பிடித்த உணவை உண்கிறோம். அதையும் சரியான முறையில் உண்கிறோமா? கண்கவர் உணவுகளின் மீது மோகம் கொண்டு நேரம் தவறி அவசர கதியில் விழுங்கிக்கொண்டிருக்கிறோம்.
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’… இது நம் முன்னோர்கள் அனுபவித்து உரைத்த பொன்மொழி.
உணவை நன்றாக மென்று விழுங்கினால், அது உமிழ்நீருடன் சேர்ந்து ஜீரண மண்டலத்தில் உள்ள சுரப்பிகளையும் சரியான முறையில் இயங்க வைக்கும்.
பொதுவாகவே உணவை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். அத்துடன் நமக்கு பிடித்தவர்களுடன் குறித்த நேரத்தில் ஒன்றாக உணவை உட்கொள்ளும்போது ஏற்படும் மகிழ்ச்சி, குடல் நலத்தை மட்டுமல்ல… உடல் நலத்தையும் காக்கும்” என்கிறார்கள் குடல்நல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி, அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்தது ஏன்?
’எம்.ஜி.ஆருடன் மோடியை ஒப்பிடுவதா?’ : அண்ணாமலைக்கு ஜெயக்குமார் காட்டமான பதில்!
இந்த வருசத்துல என்ன சாதிச்சீங்க : அப்டேட் குமாரு
பெண்கள் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!