உடல் முழுக்க அழகாக இருந்தாலும், உடலின் ஏதோ ஒரு பகுதியில் படரும் படர்தாமரை மொத்த அழகையும் கெடுத்துவிடும். இதை தடுப்பது எப்படி?
“பெயருக்கு ஏற்ற மாதிரி சருமத்தின் மேல் பகுதியில் வட்ட வட்டமாகப் பரவக்கூடிய பிரச்சினை இது. கொஞ்சம் கவனிக்காமல் விட்டாலும் உடல் முழுவதும் பரவும் அபாயம் உண்டு.
படர்தாமரையால் பாதிக்கப்பட்ட பலரும், அது படர்தாமரை என்று தெரியாமலே தாங்களே களிம்பு வாங்கிப்போடுவது, கை வைத்தியம் செய்வது என்று இருக்கிறார்கள். அதற்குள் படர்தாமரை உடல் முழுவதும் பரவி விடுகிறது.
இதைத் தடுக்க படர்தாமரை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது மிக மிக அவசியம்” என்கிறார்கள் சரும நல மருத்துவர்கள்
“படர்தாமரை என்பது சருமத்தில் ஏற்படும் ஒருவித பூஞ்சை நோய். இது ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதருக்கு, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு, மண்ணிலிருந்து மனிதர்களுக்கு என எப்படி வேண்டுமானாலும் பரவலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பெரும்பாலும் படர்தாமரை வெயில் காலத்தில் தான் ஏற்படும். இதற்கு வியர்வையும் மிக முக்கிய காரணம்.
படர்தாமரையின் ஆரம்ப மற்றும் முக்கிய அறிகுறியே அரிப்புதான். அந்த இடம் கறுப்பு நிறமாக மாறும் வாய்ப்பிருக்கிறது. மேலும், அதன் ஓரங்கள் தடித்துக் காணப்படலாம்.
படர்தாமரை தொடை, தொடை இடுக்குகள், அக்குள் போன்ற இடங்களில் இருந்து தான் பெரும்பாலும் தொடங்கும். அப்போதே சிகிச்சை எடுத்தால் விரைவில் குணப்படுத்தி விடலாம்.
பாதிப்புள்ளவர்கள் மற்றவரைத் தொடுதல், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய சீப்பு, சோப்பு, டவல் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களின் துணியுடன் சேர்த்து பிறர் துணிகளையும் துவைப்பது, ஒரே வாஷிங் மெஷினில் துணிகளைத் துவைப்பது ஆகியவற்றால் பரவும்.
ஹாஸ்டல் மாதிரியான அதிக நபர்கள் ஒரே இடத்தில் இருக்கும் இடங்களில் படர்தாமரை பரவுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.
அரிப்பு, கொப்புளம் வந்த உடனே, சரும மருத்துவரிடம் சென்று விடுவது நல்லது. சுயமாக மருந்து வாங்கிப் போடுவது பரவலை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது.
பிரச்னை தீவிரமாகி, மருத்துவரிடம் செல்லும்போது, ‘அது என்ன தொற்று?’ என்பதைக் கண்டுபிடிப்பதும் சிரமமாகிவிடும். மருத்துவர் கொடுக்கும் மருந்து வேலை செய்யாமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. அதனால் அறிகுறி ஆரம்பிக்கும்போதே மருத்துவரிடம் சென்றுவிடுங்கள்.
அறிகுறி ஆரம்பிக்கும்போதே மருத்துவரிடம் சென்றுவிட்டால், அவர்கள் கொடுக்கும் களிம்புகள் மற்றும் மருந்துகள் மூலமே 4-6 வாரங்களில் படர்தாமரையை சரிப்படுத்திவிடலாம். அதன் அடையாளம் கூட 6 மாதங்களில் மறைந்துவிடும். இல்லையென்றால் இந்த பாதிப்பு வருடக்கணக்கில் கூட தொடரும்.
படர்தாமரையால் பாதிக்கப்பட்டோர்…
தொற்று ஏற்பட்ட இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த இடத்தை சொறிவதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் இரண்டு முறை குளிப்பதும், சுத்தமான ஆடைகளை அணிவதும் அவசியம்.
டவல், சோப்பு, சீப்பு, பெட்ஷீட், காலணிகள் போன்றவற்றைத் தனியாகப் பராமரியுங்கள்.
துவைத்த துணிகளை கண்டிப்பாக வெயிலில் உலர்த்த வேண்டும்.
முக்கியமாக, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ்
என்னென்ன சொல்றாங்க பாருங்க… அப்டேட் குமாரு
நடிகராக என்ட்ரி கொடுத்த விஜய்சேதுபதி மகன்: ‘பீனிக்ஸ் வீழான்’ டீசர் எப்படி?
பக்ரீத்… மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!