வாழ்க்கை முறை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே வயிற்று எரிச்சல், புளியேப்பம், வாய்வுத் தொல்லை, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவை சாதாரண வார்த்தைகளாக உச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைக்கு ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது சர்வ சாதாரணமாகி வருகிறது.
அதற்கு காரணம், வீக் எண்ட் என்றாலே வெளியில் சென்று சாப்பிடுவதும்,அத்துடன் நேரம் தவறி சாப்பிடுவதும், கண்ணைக் கவரும் உணவு வகைகளைச் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம். பொதுவாக ஹோட்டல்களில் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருள்களையே தேவைக்கேற்ப எடுத்து சமைப்பார்கள். அசைவ உணவுகள் என்றால் அதிக நேரம் ஃப்ரீசஸரில் வைக்கப்பட்டவையாக இருக்கும். கூட்டமும் தேவையும் அதிகமாகும்போது முறையாக, சரியாகச் சமைக்கப்படாத உணவுகளே நம் டேபிளுக்கு வரும்.
செல்போனையோ, எதிரில் இருக்கும் டி.வி-யையோ, பக்கத்தில் இருக்கும் ஆட்களையோ பார்த்துக்கொண்டு, பசிக்காகக் காத்திருக்கும் வேளையில் டேபிளுக்கு வரும் சூடான உணவை – அதுவும் கெட்டுப்போன உணவை அதன் நிறத்தால், சுவையால், வாசனையால் நம்மை அறியாமலேயே சாப்பிட்டு விடுகிறோம்.
வீட்டுக்கு வந்த பிறகு தொடக்க அறிகுறியாக அஜீரணம் தலைகாட்டும். அதைத் தடுக்கும்விதமாக குளிர்பானங்களை அருந்துவோம். நமக்கே தெரிந்த அஜீரணத்துக்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம். அதற்கடுத்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படும். இவையெல்லாம் முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளாக இருக்கும்.
ஜீரண மண்டலத்தைப் பொறுத்தவரை கெட்டுப்போன உணவால் முதலில் பாதிக்கப்படுவது இரைப்பையும் சிறுகுடலும்தான். காரணம், ஈ கோலி (E coli அல்லது Escherichia coli) பாக்டீரியா. இது விலங்குகள் மற்றும் நமது குடலில் வாழ்கிறது. இது உணவை செரிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும், செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், அசுத்தமான உணவை எடுத்துகொள்ளும்போதும் சுகாதாரமில்லாத நீரை குடிக்கும்போதும் இது தீங்கு செய்யும் பாக்டீரியாவாக மாறுகிறது. மேலும், இது ஷிகா (Shiga) என்னும் நச்சுத்தன்மையை உருவாக்குவதன் மூலம் உடலை பலவீனப்படுத்தும். குடலுக்கு சேதத்தை உண்டாக்கும்.
ஒருவேளை, இறைச்சிகளில் ஈ கோலி பாக்டீரியா தொற்றிக்கொண்டிருந்து, அந்த இறைச்சி சரியாக சமைக்கப்படாமல் இருந்தால் அது மிகச்சிறிய அளவே என்றாலும் அது மோசமான தொற்றை உருவாக்கும் அளவுக்கு மாறும். உடலில் நீர்ச்சத்து குறையும். உடல் பலவீனமாகி, பல உறுப்புகள் பாதிப்படையும் நிலையும் ஏற்படும். அதாவது, பாதிப்பை ஏற்படுத்தும் கிருமியின் வீரியம் அதிகமாக இருந்து அந்த நபரின் எதிர்ப்பாற்றல் திறன் குறைவாக இருந்தால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் ஏற்படும்.
இந்த நிலையில் வெளியிடங்களில் சாப்பிடுவது தவிர்க்க முடியாதபட்சத்தில் சாப்பிட்டவுடன் குளிர்ச்சியான பானங்கள் பருகுவதால், உணவில் கலந்துள்ள எண்ணெய் இறுகுகிறது. இதனால் செரிமானம் தாமதமாகும். இதைத் தவிர்த்துவிட்டு சாப்பிட்டவுடனேயோ அல்லது சிறிது நேரம் கழித்தோ வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள். ஒரு மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம். இதனால் உணவுப் பொருள்கள் எளிதில் உடைந்து செரிமானம் எளிதாகும்.
சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ் பகுதியிலோ, அசௌகர்யமான அல்லது வலி போன்ற உணர்வு ஏற்பட்டு வயிற்று வலி அதிகரிக்கும்பட்சத்தில் சுய சிகிச்சை வேண்டாம். வலி அதிகமாகும்போது மருத்துவரிடம் பரிசோதித்துக் காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்ப சிகிச்சை பெறுங்கள்.
மாசுபட்ட குடிநீரைக் குடித்தாலும், உணவைச் சமைக்கும்போது சுத்தத்தைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், சமையல் பாத்திரங்களில் உலோகக் கலவை சரியில்லை என்றாலும், சுகாதாரம் குறைந்த அசுத்தமான உணவு விடுதிகளில் தொடர்ந்து உணவு சாப்பிடுவது போன்றவற்றாலும் செரிமானப் பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டு ஃபுட் பாய்ஸன் ஏற்படும். உணவைச் சரியான அளவில் வேகவைத்துச் சமைக்காவிட்டாலும் இதே நிலைமைதான் என்கிறார்கள் குடல் மற்றும் இரைப்பை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி சாப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்: எடை குறைந்தால் மட்டும் போதாது; உட்கொள்ளும் உணவிலும் கவனம் தேவை!
பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!
ஓடும்போதே துண்டாகப் பிரிந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்: பிகாரில் பரபரப்பு!