ஃபேஸ்பேக், ஸ்கிரப் போன்ற அழகு சாதனப் பொருள்களின் கலவை பலவற்றிலும் ரோஸ் வாட்டர் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. முகத்தையும் உடலையும் புத்துணர்ச்சியாக வைக்கவும் இந்த ரோஸ் வாட்டர் உதவுகிறது. இதை ரசாயனக் கலப்பின்றி வீட்டிலேயே தயாரிக்கும் முறை இதோ…
மிகவும் லைட் ரெட்டாக இல்லாமல், அதே சமயம் மிகவும் டார்க்காகவும் இல்லாமல், பிங்க்கும் ரெட்டும் கலந்த மாதிரி உள்ள ரோஜாப் பூக்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் வாசனை மிகவும் நன்றாக இருக்கும் என்பதால் இதை வைத்து ரோஸ் வாட்டர் தயாரித்தால் நன்றாக இருக்கும்.
முதலில், ஒரு பவுல் முழுக்க இந்த ரோஜாப் பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பெரிய அகலமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வையுங்கள். பாத்திரத்தின் நடுவில் ஒரு தட்டையான கருங்கல் அல்லது இரண்டு குட்டியான டைல்ஸ் என வையுங்கள். இதன் உள்ளே வைக்கப்போகும் மற்றுமொரு குட்டிப் பாத்திரம் ஆடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டை நாம் செய்கிறோம்.
இப்போது, ரோஜாப் பூக்களின் இதழ்களை பாத்திரத்தின் நடுவில் வைத்திருக்கும் டைல்ஸைச் சுற்றிச் சேருங்கள். இதன் கூடவே இரண்டு கப் மினரல் வாட்டர் அல்லது டிஸ்டில்டு வாட்டரைச் சேருங்கள். தண்ணீர் தூய்மையாக இருக்க வேண்டியது மிக அவசியம். அடுத்து, காபி குடிக்கப் பயன்படுத்தும் டபராவை டைல்ஸ்ஸின் மேலே வையுங்கள். பேன் அல்லது தவாவை மூடுவதற்குப் பயன்படுத்தும் பெரிய சைஸ் கிளாஸ் மூடியால் (Glass lid) பாத்திரத்தை மொத்தமாக மூடுங்கள். கிளாஸ் மூடியில் ஆவி வெளியேறுவதற்காக இருக்கும் துளையைச் சிறிது கோதுமை மாவு பேஸ்ட் அல்லது மைதா/கார்ன்பிளவர் பேஸ்ட் கொண்டு அடைத்துவிடுங்கள்.
இப்போது அடுப்பை ஆன் செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சூடு ஏற ஏற, ரோஜா இதழ்களில் இருக்கும் சாறும் எண்ணெயும் நீராவி போலச் சேர்ந்து நடுவில் நாம் வைத்திருக்கும் டபராவில் வந்து விழத்தொடங்கும். இப்போது கிளாஸ் மூடியின் மேலே, கொஞ்சம் ஐஸ் கட்டிகளை வைத்தால் பாத்திரத்தின் உள்ளே உருவாகும் நீராவி கொஞ்சம்கூட வீணாகாமல் திரவமாக டபராவில் வந்து சேர ஆரம்பிக்கும். ரோஜா இதழ்களில் இருக்கும் எண்ணெயும் சாறும், முழுவதுமாக வெளியேறியவுடன் அடர் நிறத்திலிருந்த ரோஜா இதழ்கள் வெளிர் நிறத்திற்கு மாறிவிடும்.
இப்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். டபராவில் சேகரமாகியிருக்கும் திரவத்தை வெளியில் எடுத்துப் பார்த்தால், அது எவ்வித நிறமும் இல்லாமல் தண்ணீர்ப் போல பிளெயினாக இருக்கும். இதுதான் உண்மையான, தூய்மையான ரோஸ் வாட்டர். இதனைக் குளிரவைத்துப் பயன்படுத்தலாம். ஐந்து முதல் ஆறு மாதங்கள் இதனை வெளியில் வைத்துப் பயன்படுத்தலாம். ஃபிரிட்ஜில் வைத்தால் இன்னும் சில மாதங்களுக்கு வைத்துப் பயன்படுத்த முடியும். இதனுடன் ஒரேயொரு சொட்டு ரோஸ் ஆயிலைச் சேர்த்தால் ரோஸ் வாட்டர் இன்னும் சிறப்பாக மாறும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்த இது ஏதுவாக இருக்கும்.
இதைத் தவிர, பாத்திரத்தில் ரோஜா இதழ்களுடன் சேர்ந்திருக்கும் தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து, அதனுடன் ஒரு சொட்டு ரோஸ் ஆயில் சேர்த்து, வெளியே இரண்டு நாள்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம். அல்லது, ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரம், 10 நாள்கள்வரை பயன்படுத்தலாம். உடல், தலை, முகம் என அனைத்திலும் இந்த வாட்டரை அப்ளை செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விசிகவில் புதிய மா.செக்கள்… -பழையவர்கள் மீது கை வைக்காத திருமா- என்ன பின்னணி!
முடிவுக்கு வரும் அதிமுக பாஜக பிரேக் அப் : அப்டேட் குமாரு
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை!