வெளியில் வாங்கும் ஹேர் டைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ள நிலையில் வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாமா என்கிற கேள்வி பலருக்குண்டு. இதற்கான பதில் என்ன?
“இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் டையிங் செய்து கொள்ள முடியும். ஆனால், ரெடிமேட் ஹேர் டை பாக்கெட்கள் கொண்டு செய்யப்படுவது போல, இது ஓரிரு மணி நேரத்தில் முடிவது அல்ல. இரண்டு நாட்கள் கேசப் பூச்சு பூச வேண்டும்.
முதல் நாள், கடைகளில் கிடைக்கும் தரமான மருதாணி பவுடரை வாங்கி, தண்ணீரில் குழைத்து, முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனி வரை படும்படி அப்ளை செய்ய வேண்டும்.
பிறகு மைல்டு ஷாம்பூ பயன்படுத்தி சாதாரண தண்ணீரில் கேசத்தை அலச வேண்டும். இரண்டாவது நாள், அவுரி பொடியை தண்ணீரில் குழைத்து கேசத்தில் தடவி அலச வேண்டும். இந்தப் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
இப்படிச் செய்யும்போது, கேசத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும். இதில் ரசாயனங்கள் எதுவும் இல்லாததால் பக்கவிளைவுகள் ஏற்படாது.
ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதால் அலர்ஜி ஏற்படுபவர்களும், சென்சிட்டிவான சருமம் உள்ளவர்களும் இந்த முறையைப் பயன்படுத்தி கேசத்தை கலர் செய்யலாம்.
காலம் செல்லும் வேகத்தில் இயற்கை முறையை செயல்படுத்துவதற்கு இரண்டு நாள்கள் ஆகும் என்பதாலேயே பலரும் ரெடிமேட் ஹேர் டை பக்கம் திரும்பி விடுகின்றனர்.
இயற்கை முறையில் இருக்கக் கூடிய ஆரோக்கியம் சார்ந்த பாசிட்டிவ் விஷயங்களை கவனிக்க மறக்கின்றனர்” என்று சொல்லும் அழகுக்கலை நிபுணர்கள்… புதிதாக ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கான டிப்ஸையும் சொன்னார்கள்…
“புதிதாக ஹேர் டை பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக `பேட்ச் டெஸ்ட்’ (Patch Test) செய்ய வேண்டும். நம் உடலுக்கு அந்தப் பொருள் ஒத்துப்போகிறதா, இல்லையா என்பதை சோதிப்பதற்கான ஒரு வழி இது. ஹேர் டையை சிறிதளவு எடுத்து காதின் பின்புறமோ முழங்கையிலோ தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். எவ்வளவு நேரம் வைத்திருக்க வேண்டும் என்பது அந்தந்த டையின் பாக்கெட்டிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். பரிசோதித்த இடத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென்றால் அதை தாராளமாகப் பயன்படுத்தலாம். பேட்ச் டெஸ்டின்போது அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் அதைப் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜிவி பிரகாஷின் ரெபெல் டீசர்: ஸ்பெஷல் என்ன?
ஐம்பது சதவீதமாக சரிந்த LIC லாபம்: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!