பியூட்டி டிப்ஸ்: வெயிலை விரட்டும் வெந்தயம் பேக்!

Published On:

| By Minnambalam Desk

இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்றவை அபரிமிதமாக இருக்கும் வெந்தயம், உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் உற்ற நண்பன். அதனால்தான் நம் தமிழ்க் குடும்பங்களின் சமையலறையில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. How to make fenugreek pack

‘ஆரோக்கியமட்டுமல்ல, கோடையில் சரும அழகை மேம்படுத்தவும், பருக்களை விரட்டவும் வெந்தயம் உதவும்’ என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். இதற்காக வீட்டிலேயே வெந்தயம் பேக் தயாரிப்பு முறையையும் சொல்லித் தருகிறார்கள்.

கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன், பாதாம் எண்ணெய் – ஒன்றரை அல்லது இரண்டு டீஸ்பூன், வறுத்து அரைத்த வெந்தயப் பொடி – ஒரு டீஸ்பூன் என்ற அளவுகளில் எடுத்துக் கொள்ளவும். கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் நன்றாகக் கலக்கவும். தொடர்ந்து இதை கலக்கிக்கொண்டே இருக்கும்போது, இக்கலவை க்ரீம் போன்ற பதத்திற்கு வந்துவிடும். பின்னர் இதனுடன், வறுத்து அரைத்த வெந்தயப் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான்… மென்மையான பதத்தில் வெந்தயம் ஃபேஸ் பேக் ரெடி.

இந்தக் கலவையை ஒரு சிறிய ஃபேஷியல் பிரஷ்ஷில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, கழுத்து மற்றும் முகத்தில் கீழிருந்து மேலாக அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்களுக்குக் காய விடவும், அதற்கு மேல் வேண்டாம். பின்னர், சின்னச் சின்ன வட்டங்களாக தேய்த்து, ஸ்கிரப் செய்து, பேக்கை அகற்றவும். சருமத்தைக் கழுவவும்.

இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மிருதுவாகவும், பளிச்சென்றும் ஆக்கும். குறிப்பாக, கழுத்து கருமையாக இருப்பவர்கள் இந்த பேக்கை தொடர்ந்து போடப் போட கருமை மறைவதைப் பார்க்க முடியும். சிலருக்குக் கழுத்தில் செயின் படும் இடமே கருமையாகிவிடும். அதற்கும் இந்தப் பேக் சிறந்த தீர்வை அளிக்கும். அதுமட்டுமல்லாமல் வெயில் பட்டு முதுகின் மேல் பகுதி சிலருக்கு கருமையாக இருக்கும். அந்தக் கருமை யையும் இந்த பேக் நீக்கும்.

சருமத்தின் கருமையை மட்டுமல்லாமல் முகப்பருக்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்தப் பேக்கிற்கு உண்டு. குறிப்பாக, வெந்தயத்தில் இருக்கக்கூடிய கசப்புத்தன்மை பருக்களை சுருங்கச் செய்துவிடும். அதேபோல தோளின் மேல்பகுதியில் வரக்கூடிய சிறு சிறு ஒவ்வாமைகளையும் இது சரிசெய்யும். இதை கைகள் மற்றும் கால்களுக்கும் பயன்படுத்தலாம்.

குளிக்கும்போது ஒரு பாடி ஸ்கிரப்பராகவும் பயன்படுத்தலாம். கொஞ்சம் ஜெல், கொஞ்சம் ஆயில் ஆகிய இரண்டும் இந்த ஃபேஸ் பேக்கில் இருப்பதால் எண்ணெய்ப்பசை சருமம், மற்றும் உலர் சருமம் ஆகிய இரண்டுக்குமே இது ஏற்றது. How to make fenugreek pack

இந்த ஃபேஸ் பேக்கை ஒரு வாரத்தில் ஒரு முறையோ, இரண்டு முறையோ பயன்படுத்தலாம். வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் அதற்கு மேல் வேண்டாம். மேலும், குளிர்ச்சி ஒத்துக்கொள்ளாதவர்கள் மற்றும் சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் இந்தப் பேக்கைத் தவிர்த்து விடுவது நல்லது’’ என்கிறார்கள். How to make fenugreek pack

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share