முன்பக்கத்தில் உள்ள முடிகளை எல்லாம் இழுத்து, பின்பக்கம் கொண்டுவந்து உச்சந்தலையில் குதிரைவால் போலக் கட்டிக்கொள்ளும் வழக்கம் இன்று இரு பாலருக்கும் இருக்கிறது.
தொட்டியில் உள்ள ஒரு பூச்செடியை மண்ணிலிருந்து இழுத்துப் பிடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம்கண்டு, ஒரு கட்டத்தில் வேரோடு வெளியே வந்துவிடுமல்லவா… அது போலத்தான் முன்னந்தலையில் உள்ள முடிகள் உதிர முக்கிய காரணமாகி வருகிறது.
இதைத் தவிர்க்க… பள்ளிக் குழந்தைகளுக்குத் தலைவாரி பின்னல்போடும்போதுகூட, ஒரே மாதிரி வகிடு எடுப்பதைத் தவிருங்கள்.
ஒரு மாதம் இடப்பக்க வகிடு, இன்னொரு மாதம் வலப்பக்க வகிடு, பிறகு நேர் வகிடு என மாற்றி மாற்றி எடுத்து சடை பின்னிவிடுங்கள். இதன் மூலம், முன்னந்தலையில் ஏற்படும் முடி உதிர்வைத் தடுக்கலாம்.
நேர் வகிடு எடுத்து சடைப் பின்னல் பின்னி அனுப்பப்படும் குழந்தைகள், பள்ளிக்கூடத்தில் பல மணி நேரம் வெயில்பட நிற்கும்நிலையில், வகிட்டுப் பகுதியில் வெயில் பட்டு முடி உதிரத் தொடங்கும்.
அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு வகிட்டுப் பகுதியில் பெரிய இடைவெளி வந்திருப்பதைப் பார்க்க முடியும்.
முடி உதிர்வுக்கு மற்றொரு காரணம், முறையான பராமரிப்பின்மை. காலையில் கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்லும் நிலையில் சடை பின்னிக்கொண்டோ, குதிரைவால் போட்டுக்கொண்டோ செல்வார்கள்.
மறுபடி வீடு திரும்பியதும் அந்த முடியை அள்ளி முடிந்து இறுக்கமாக கொண்டை போட்டுக்கொள்வார்கள். மறுநாள் காலை மறுபடி கிளம்பும்போதுதான் அந்தக் கூந்தலைப் பிரிப்பார்கள்.
தலைக்குக் குளிக்காததும், தலைமுடியைப் பராமரிக்காததும் மிகப் பெரிய தவறுகள்.
தினமும் கூந்தலை 10-12 முறை நன்கு வாரிவிடுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தினமும் இரவில் தலையை நன்கு வாரி, தளர்வாக பின்னல் போட்டுக்கொண்டு தூங்கச் செல்லவும்.
இப்படிச் செய்வதால் கூந்தலில் சிக்கு விழாது. சிக்கு விழுவதும் முடி உதிர்வுக்கு காரணம் என்பதால் மேற்படி வழிகளைப் பின்பற்றி முன்னந்தலை முடி உதிர்வைத் தவிர்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காய குழம்பு