“முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினை எல்லா சீசனிலும் நடக்கிற விஷயம் தான். அதைச் சின்னச் சின்ன டிரிக்ஸ் மற்றும் ஃபேஸ் பேக்குகள் மூலம் கட்டுப்படுத்தலாம்” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
முகத்தில் எண்ணெய் அதிகமாக வடிகிறபோது, குழாய்த் தண்ணீரை கைகளில் பிடித்து, முகத்தில் வேகமாக அடித்துக் கழுவி, அழுத்தமாகத் துடைத்தெடுங்கள். சோப், ஃபேஸ்வாஷ் எதுவும் வேண்டாம். இப்படி வேகமாக அடிக்கிறபோது, சருமத்தில் இருக்கும் துளைகளுக்குள் நீர் சென்று, அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கிவிடும்.
முகத்தை வாஷ் செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் டோனருடன் குளிர்ச்சியான மினரல் வாட்டரை கலந்து, முகத்தில் ஸ்பிரே செய்துகொண்டால், அடுத்த 3 மணி நேரத்துக்கு முகத்தில் எண்ணெய் வழியாது.
மேக்கப் கட்டாயம் போடக்கூடிய வேலையில் இருப்பவர்கள், ஐஸ் க்யூபை மெல்லிய காட்டன் கர்ச்சிப்பில் சுற்றி, முகம் முழுக்க வட்ட வட்டமாகத் தேயுங்கள். சருமத் துவாரங்கள் அடைபட்டு, எண்ணெய் வழிவது கட்டுப்படும்.
ஈரமான டிஷ்யூவில் ஐஸ் கியூபைச் சுற்றி, முகத்தில் தேய்த்தாலும் எண்ணெய் சருமத்துக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
அரிசி மாவுக்கு எண்ணெய் வழிவதைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அதனால், ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன், ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர், வெண்ணெய் இல்லாத மோர் சேர்த்துக் குழைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பசையை முகத்தில் தடவி, அரை மணி நேரம் காயவிடுங்கள். காய்ந்தப் பிறகு, தண்ணீரைத் தொட்டுத் தொட்டு முகம் முழுக்கத் தடவி, ஈரத் துணியால் துடைத்து எடுங்கள். குறைந்தது 3 மணி நேரத்துக்கு எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
விழாக்களுக்குச் செல்ல வேண்டும். 5 மணி நேரத்துக்கு முகத்தில் எண்ணெய் வழியக் கூடாது என்பவர்கள், சிறிதளவு சோள மாவில், விதையில்லாத தர்பூசணித் துண்டுகள் மற்றும் 5 சொட்டு லைம் ஆயில் சேர்த்து, குழைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு, ஐஸ் வாட்டரால் முகத்தைக் கழுவுங்கள். விழா முடியும் வரை பளிச் முகத்துடன் இருப்பீர்கள்.
சிலருக்கு முகத்தில் திட்டுத்திட்டாக கறுத்துவிடும். இவர்கள், ஒரு பன்னீர் ரோஜா, 5 தாமரை இதழ்கள், ஒரு டீஸ்பூன் கடலை மாவு அல்லது அரிசி மாவு இவற்றுடன் தேவையான அளவு காய்ச்சாத பால் சேர்த்து மிக்சியில் அரையுங்கள். இதை, முகத்தில் பேக்காகப் போடுங்கள். தாமரைப்பூ கிடைக்காதவர்கள் அதற்குப் பதில், லோட்டஸ் ஆயில் வாங்கிப் பயன்படுத்தலாம்.
மஞ்சள் பூசணியுடன் தேங்காய்ப்பால், ஒரு டீஸ்பூன் ஜவ்வரிசி மாவு சேர்த்து அரைத்து, தொடர்ந்து முகத்தில் பேக்காகப் போட்டுவந்தால், முகம் பாலீஷ் போட்டதுபோல மாற ஆரம்பிக்கும். எண்ணெய் வடிவதும் கட்டுப்படும்.
மேலே சொன்ன டிப்ஸை எல்லாம் செய்ய நேரமில்லையா? காய்ச்சாத பாலில் ஒரு பிரெட்டை ஊறவைத்துப் பிசைந்து, முகத்தில் தினமும் பேக்காக போட்டு வாருங்கள். பிரெட்டில் இருக்கும் ஈஸ்ட், முகத்தில் எண்ணெய் வடிவதைக் கட்டுப்படுத்திப் பொலிவாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: புருவம் அடர்த்தியாக… பூனைமுடி உதிர…
ஹெல்த் டிப்ஸ் : வீசிங் பிரச்சினைக்கு வீட்டு வைத்தியம்!
டிஜிட்டல் திண்ணை: மோடி விழாவில் திருச்சி தந்த ஷாக்- ஸ்டாலின் நடத்திய விசாரணை!