சென்னையை உலுக்கியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் பல கார்கள், இருசக்கர வாகனங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன அல்லது வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த இந்த உடமைகள் கண்முன்னே வெள்ளத்தில் சேதமடைவது என்பது அதன் உரிமையாளருக்கு மிகுந்த மனச்சோர்வையும், மனவலியும் தரும். ஆனால் அவருக்கு ஆறுதலாக இருப்பது எப்படியும் இன்சூரன்ஸ் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை மட்டுமே.
எனினும் சரியான முறையில் இன்சூரன்ஸ் பெறுவதற்கு இங்கு குறிப்பிட்ட நடைமுறைகள் உள்ளன.
எனவே இப்படி வெள்ளத்தில் கடும் சேதத்தை சந்தித்துள்ள இந்த வாகனங்களுக்கு எப்படி எளிதாக இன்சூரன்ஸ் பெறுவது என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக காணலாம்.
::> உங்கள் வாகனம் மழை வெள்ள நீரில் மூழ்கி விட்டாலோ அல்லது மழை நீரில் அடித்து சென்று விட்டாலோ நீங்கள் முதலில் பொறுமை காப்பது மிக முக்கியம். நீரில் மூழ்கி சேதமடைந்த உங்கள் வாகனத்தை காப்பாற்றுவதற்காக நீங்கள் அவசரப்படும் ஒவ்வொரு கணமும் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
::> வெள்ளநீர் எந்த அளவிற்கு உங்கள் காரில் நிரம்பி இருந்தது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் உங்கள் செல்போனில் முதலில் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். இதை மெக்கானிக் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காட்ட வசதியாக இருக்கும்.
::> மழைநீர் சூழ்ந்திருக்கும்போது அவசரப்பட்டு காரின் அருகே சென்று காரின் கதவை திறக்க முயற்சி செய்யாதீர்கள். அப்படி காரின் கதவை திறந்தால் வெளியே இருக்கும் வெள்ள நீர் கார் உள்ளே சென்று கூடுதல் சேதங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரம் காரை ஸ்டார்ட் செய்யவும் கண்டிப்பாக முயற்சிக்க கூடாது.
::> கார் வெள்ள நீரால் சூழ்ந்து இருக்கும் போதே அதை புகைப்படம் எடுத்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி, உங்களது கார் இப்படியான சேதத்தை சந்தித்து விட்டது என்பதை முறையாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள்.
::> போன் செய்தோ, இ-மெயில் மூலமோ ஏதாவது ஒரு வகையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டியது உங்களது முதல் கடமையாக இருக்க வேண்டும்.
::> வெள்ளத்தில் மூழ்கி உங்கள் வாகனம் முழுமையாக சேதமாகி இருந்தால், வெள்ளம் வடிந்த பின்பு காரை மெக்கானிக்கிடம் கொண்டு செல்வதற்கு முன்பாக இது குறித்து நீங்கள் போலீசில் சென்று புகார் அளிக்க வேண்டும். போலீசார் உங்கள் புகாரை பெற்றுக் கொண்டு முதல் விசாரணை அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்வார்கள்.
::> இதை அடிப்படையாகக் கொண்டுதான் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் காருக்கு ஏற்படும் சேதாரங்களுக்கான பணத்தை வழங்கும். இந்த எஃப்ஐஆர் என்பது முழுமையாக உங்கள் கார் சேதமானால் மட்டுமே தேவைப்படும்.
::> அதன்பின்னர் உங்கள் காரின் பேட்டரியை துண்டித்து ஸ்டார்ட் செய்யாமல் மெக்கானிக் அல்லது உங்கள் கார் ஷோரூம் சர்வீஸ் சென்டருக்கு ’டோ’ செய்து எடுத்துச் செல்லுங்கள்.
::> அங்கு காருக்கு என்ன நேர்ந்தது என முழுமையாக ஊழியருடன் ஆய்வு செய்து அதை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள். அதன் மூலம் அந்த காருக்கு ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய எவ்வளவு செலவாகும் என மதிப்பிடப்பட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதற்கான தொகையை உங்களுக்கு வழங்க முன் வரும்.
::> ஒருவேளை அதிகமான சேதம் ஏற்பட்டிருந்தால் முழுவதுமாக காரை ஸ்கிராப் செய்துவிட்டு, முழு இன்சூரன்ஸ் பணத்தையும் உங்களுக்கு வழங்க நிறுவனம் முடிவு செய்யலாம்.
::> அதற்காக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி நேரில் வந்து உங்கள் வாகனத்தை பார்வையிட்டு அதில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல்களை எல்லாம் சேகரித்து செல்வார்.
::> வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்த பின் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் பணத்தில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் நீங்கள் அந்நிறுவனத்திடம் பேரம் பேசி அதிக தொகையை பெற முடியும்.
::> இறுதியாக நீங்கள் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட பின்பே அந்த பணம் உங்களுக்கு வழங்கப்படும்.
மிக முக்கியமான குறிப்புகள்:
::> இன்சூரன்ஸ் வேண்டுமென்றால் எக்காரணத்தைக் கொண்டும் வெள்ளத்தில் மூழ்கிய காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள்.. ஒருவேளை அதனால் இஞ்சின் பழுதானால் இன்சூரன்ஸ் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.
::> வெள்ளத்தால் வாகனங்களின் என்ஜின், எலக்ட்ரிக்கல் பாகங்கள் தான் கடுமையாக பாதிப்படையும். அதன் மதிப்பு காரின் பிராண்டை பொறுத்து சில லட்சங்கள் வரை இருக்கும். எனவே இன்சூரன்ஸ் பெறுவதற்கு மிகுந்த பொறுமை அவசியம். கவனமுடன் செயல்படுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஷாருக்கானை தொடர்ந்து…. பாக்ஸ் ஆபிஸில் ரன்பீர் கபூர் சாதனை!
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
மிக்ஜாம் புயல் : பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் ஆறுதல்!