மழை, குளிர்காலங்கள் சிலருக்கு மூச்சுவிடுவதில் சற்று சிரமத்தை ஏற்படுத்திவிடும். இந்தக் காலங்களைக் கடந்து வருவதே அவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். இந்தப் பருவங்களில் குளிர்ச்சியான உலர் காற்று, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம், ஒவ்வாமைகள் எனப் பல்வேறு விஷயங்கள் மேலும் தீவிரமாக்கிவிடும். இந்த நிலையில் மழை, குளிர் காலங்களில் இவர்கள் எதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும், செய்யக்கூடாதவை எவை என்று பட்டியலிடுகிறார்கள் நுரையீரல் மருத்துவர்கள்.
மழை, குளிர்காலங்களில் வீசும் குளிர்ந்த காற்றால், மூச்சுக் குழாய்களில் உள்ள தசைகள் மேலும் இறுக்கம் அடைந்து மூச்சுத்திணறல் வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதனால் மருத்துவரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்வது மிக அவசியம். அவை மூச்சுக்குழாய் தசைகளைத் தளர்வாக்க உதவும்.
இன்ஹேலர் (Inhaler) பயன்படுத்துவோர், மூச்சுத்திணறல் வரும்போது மட்டும் அல்லாமல், மருத்துவர் பரிந்துரைத்தபடி தொடர்ந்து அதைப் பயன்படுத்த வேண்டும் .
மூச்சுப் பயிற்சிகள் செய்யலாம். ஆனால், அது மட்டுமே தீர்வு அளிக்காது. மூச்சுப் பயிற்சியோடு, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வது நோயின் தீவிரம் குறைக்க உதவியாக இருக்கும்.
உடலில் நீர்ச்சத்து வறண்டுபோகாமலிருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சோபா , சுவர்கள் போன்றவற்றில் இந்தக் காலங்களில் உருவாகும் பூஞ்சைகள் பொதுவான காரணியாக உள்ளன. எனவே, மழை, குளிர் காலங்களில் வழக்கத்தைவிட வீட்டின் உட்புற சுத்தத்தை அதிகமாக கவனிக்க வேண்டும்.
வெளியில் செல்லும்போதோ, அதிகமான தூசு, மாசு உள்ள இடங்களுக்குச் செல்லும்போதோ மாஸ்க் அணிவது நல்லது.
பால், முட்டை, கத்திரிக்காய் என குறிப்பிட்ட உணவுகளுக்கு ஒவ்வாமை இருந்தால், அவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஒவ்வாமைக்கு ஏற்ப உணவுப் பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற காலங்களில் ஐஸ்க்ரீம், யோகர்ட் போன்ற உறைந்த, குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஒவ்வாமை, தூசு ஏற்படுத்தக்கூடிய இடங்களுக்குச் செல்லக்கூடாது.
கொசுவத்தி, கொசுவிரட்டி, வாசனை திரவியங்கள், அகர்பத்தி என ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருள்களை உபயோகிக்கக்கூடாது. இவை மேலும் தீவிரப்படுத்தும்.
இந்தக் காலங்களில் வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளை நெருக்கமாக வைத்துக் கொஞ்சுவதோ, நீண்ட நேரம் தொட்டு விளையாடவோ கூடாது. கூடுமானவரை அவற்றிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். நோய்த்தொற்றுகள் பரவவும், அவற்றின் ரோமம் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சு விடுவதை மேலும் தீவிரமாகலாம்.
மன அழுத்தம் ஏற்படாமல் மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பது நல்லது. மூச்சுத் திணறல் ஏற்பட மன அழுத்தமும் ஒரு காரணமாக அமைந்துவிடும்.
மழை, குளிர் காலங்களில் மருத்துவர் சொல்லாமல் கூடுதல் மருந்துகளை எடுக்கக்கூடாது. வழக்கமான மருந்துகளைத் தொடர்ந்து எடுத்தாலே போதுமானது. பாதிப்பு அதிகமாக இருப்பதால் அதிக மருந்துகள் எடுக்க வேண்டும் என்பதில்லை.
புகைப்பழக்கம் மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம். எனவே, புகை பிடிப்பதையும், புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 மாநிலங்கள்… 29 செல்போன் டவர் கொள்ளையர்கள்… தமிழ்நாடு போலீஸின் ‘பான் இந்தியா’ ஆபரேஷன்!
ஒரே அணிக்காக விளையாடிய தந்தை, மகன்… என்.பி.ஏ.வில் லெப்ரான் சாதனை!
தனிநபர் வருமானம் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகம்: எப்படி?