ஹெல்த் டிப்ஸ்: 40 ப்ளஸ்… பலவீனமாகும் எலும்புகள்… தவிர்ப்பது சுலபம்!

Published On:

| By Selvam

40 வயதை கடந்தவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று, எலும்பு பலவீனம். பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். பிறகு எலும்புத் திசுக்கள் சுருங்குவதால் எலும்புகள் பலவீனம் அடையும்.

இந்த நிலையில், “பால் சாப்பிட்டால் எலும்பு நல்ல வலிமை பெறும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இதனால், எலும்புக்குத் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான எலும்புக்கு உதவி புரிகின்றன. தயிர், மோர் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம். வைட்டமின் டி, நம் உடலில் உள்ள தசைகள் வலிமை பெறுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும். தினமும் 20 நிமிடங்கள் காலை சூரிய ஒளி உடலில் படும்படி வேலைகளோ, பயிற்சிகளோ செய்யலாம். நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகள் மூலம் தசைகள் மட்டும் அல்லாமல், எலும்புகளும் வலுவடைகின்றன.

அதிக உடல் எடை, எலும்பு மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, தேய்மானத்தை விரைவுபடுத்தும் என்பதால் உடல் பருமனானவர்கள் எடையைக் குறைப்பதன் மூலம் முதுகெலும்பு, கால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம். கார்பனேட்டட் குளிர் பானங்களில் அளவுக்கு அதிகமான பாஸ்பேட் இருக்கும். இத்தகைய பானங்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

35 வயதைக் கடந்த பெண்கள், 40 வயதைக் கடந்த ஆண்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது எலும்பு அடர்த்தி பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். இதனால், பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்ய முடியும்” என்கிறார்கள் எலும்பு, மூட்டு சிறப்பு நிபுணர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel