தப்பித்தவறிக்கூட முடியில் தேன் பட்டுவிடக்கூடாது… மீறிப்பட்டால் அன்றைய தினமே மொத்த முடியும் வெளுத்துவிடும் என்பது காலங்காலமாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கைகளில் ஒன்று.
ஆனால், இன்று அழகு சாதன சிகிச்சைகளில், குறிப்பாக கூந்தலுக்கான பொருட்களில் தேன் சேர்த்து வருகிறார்கள் என்பதே உண்மை என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.
மேலும், “தேன், நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்ஸையும் நிறைய மருத்துவ குணங்களையும் கொண்டது. அதனால்தான், அதை சளி, இருமல், வீஸிங் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கான மருந்துகளிலும் பயன்படுத்துகிறோம்.
உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும்போது கிடைக்கிற பலன்களைப் போலவே, தேனை வெளிப்பூச்சாகப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்களும் அதிகம். தவிர தேன் என்பது மிகச் சிறந்த கண்டிஷனர். அது நம் சருமத்தை மட்டுமன்றி, கூந்தலையும் பராமரிக்கக்கூடியது.
தேனில் குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் (Glucose oxidase) என்கிற என்சைம் இருக்கிறது. இது ஹைட்ரஜன் பெராக்ஸைடை உருவாக்கக்கூடியது. இது முடியின் நிறத்தை லேசாக மங்கச் செய்யும்.
ஆனால், தேன் பட்டாலே முடி வெள்ளையாக மாறிவிடும் என்று அர்த்தமில்லை. ஷாம்பூ, கண்டிஷனர் போன்றவை உபயோகத்துக்கு வரும் முன், தேனை முடிக்கான கண்டிஷனராக பயன்படுத்தலாம். மண்டைப்பகுதியில் உள்ள இன்ஃபெக்ஷனுக்கு தேனை மருந்தாகவே சித்த மருத்துவத்தில் பரிந்துரைப்பதுண்டு.
உண்மையில், தேன் பயன்படுத்தும்போது கூந்தல் மிருதுவாகவும் வறட்சியின்றியும் இருக்கும். முடி வறட்சி இல்லை என்றாலே, வளர்ச்சியும் சீராக இருக்கும். தரமான தேனுடன் ஜோஜோபா ஆயில், ரோஸ்மெர்ரி ஆயில் போன்ற அரோமா ஆயில்களை கலந்து பயன்படுத்தும்போது முடி தொடர்பான பிரச்னைகள் இன்னும் சீக்கிரம் சரியாகும்.
தேனை எப்போதும் எதற்கும் சூடுபடுத்தி உபயோகிக்கக்கூடாது. இந்த எல்லாமே தரமான, சுத்தமான தேனுக்கு மட்டுமே பொருந்தும். தேனில் சமீப காலமாக அதிகபட்ச கலப்படங்கள் செய்யப்படுகின்றன. சர்க்கரைப் பாகை தேன் என ஏமாற்றி விற்கிறார்கள். தரமான தேன் எந்தவிதமான பக்க விளைவையும் ஏற்படுத்துவதில்லை” என்று தெளிவுபடுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் சிக்கி