நாள் தொடங்கும்போது உடலுடன் சேர்ந்து தன் பணியைத் தொடங்குகின்றன கண்களும். சோர்ந்திருக்கும் உடல் தானாகவே ஓய்வைத் தேடும். சில நேரங்களில் உடல் ஓய்வாக இருக்கும்போதுகூட கண்கள் தன் பணியைச் செய்கின்றன.
அப்படிப்பட்ட உங்கள் கண்களுக்கு நீங்கள் எவ்வளவு நேரம் ஓய்வு தருகிறீர்கள்?
நாம் இயல்பாக காட்சிகளைப் பார்க்கும்போது அதனிடையே கண் சிமிட்டும் செயல்பாடு நடக்கும். ஒரு நிமிடத்தில் 18 முதல் 20 முறை கண் சிமிட்டுவது என்பது இயல்பானது.
ஆனால், ஏதாவது ஒரு செயலை மிகவும் உன்னிப்பாகச் செய்யும்போது அல்லது செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்ற திரைகளை நாம் கூர்ந்து பார்ப்பதால் கண்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்படும்.
டிவி, கம்ப்யூட்டர், மொபைல் பார்ப்பது போன்ற விஷயங்களை குறைவான நேரம் செய்வதில்லை. உதாரணத்துக்கு டிவியில் ஒரு திரைப்படம் பார்த்தால் மூன்று மணி நேரமும் இடைவிடாமல் பார்த்துக்கொண்டே இருப்போம்.
கண்களுக்கு சிரமம் கொடுக்கும் இதுபோன்ற விஷயங்களைத் தொடர்ந்து செய்யும்போது நமது ‘விஷுவல் அப்பரெட்டஸ்’ -க்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும்.
இதுதவிர கண்களில் இருக்கும் அழுக்கு, தூசு, இறந்த செல்களை வெளியேற்றும் பணியும் கண் சிமிட்டும்போது நடைபெறுகிறது.
கண் சிமிட்டும்போதுதான் கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் கிடைக்கும். கண் சிமிட்டுவது குறையும்போது இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் குறையும். கண்களில் வறட்சி ஏற்படும்.
“இது நீடிக்கும்போது கண்களின் வறட்சி தீவிரமாகி, எரிச்சலுணர்வு ஏற்படும். இந்தப் பிரச்சினையைத்தான் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் அல்லது கேட்ஜெட் விஷன் சிண்ட்ரோம்” என்று கூறும் கண் மருத்துவர்கள், இதற்கான தீர்வையும் சொல்கிறார்கள்…
“இதைத் தவிர்ப்பதற்கு 20-20-20 என்ற விதியைப் பின்பற்ற வேண்டும்.
அதாவது கம்ப்யூட்டர், மொபைல் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளை 20 நிமிடங்கள் பயன்படுத்தியதும் கண்களை அதிலிருந்து விலக்கி 20 அடிகள் தொலைவிலுள்ள காட்சியை 20 விநாடிகளுக்குப் பார்க்க வேண்டும்.
இப்படிச் செய்வதன் மூலம் கண்களுக்கு சற்று ஓய்வு கிடைப்பதோடு, அவை சிரமத்துக்குள்ளாவதும் (Eye Strain) தவிர்க்கப்படும்.
20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20-20-20 விதியைப் பின்பற்ற முடியாதவர்கள் முதலில் 30 அல்லது 40 நிமிடங்களுக்கு ஒருமுறை ரிமைண்டர் அல்லது அலாரம் செட் செய்து இதைப் பயிற்சி செய்யலாம். பழகிய பிறகு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இதைச் செய்யலாம்.
இந்த விதியைப் பின்பற்றும்போது அதிகபட்சம் நான்கு மணி நேரம் வரை கம்ப்யூட்டரில் பணியாற்றலாம். அதேபோல நீண்ட நேரம் தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்கள் சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு 30 நிமிடங்கள் குட்டித் தூக்கம் (Short Nap) போடலாம்.
இதன் மூலம் கண்களுக்கு ஓய்வு கிடைப்பதோடு, கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கு ஏற்படும் சோர்வையும் தடுக்க முடியும். இவற்றைப் பின்பற்றினாலே கண்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்துவிடும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ்
என்னென்ன சொல்றாங்க பாருங்க… அப்டேட் குமாரு
ஹெல்த் டிப்ஸ்: தரையில் அமர்ந்தால் மரத்துப்போகும் கால்கள்… தீர்வு என்ன?
பாடப்புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் நீக்கம்: காங்கிரஸ் கண்டனம்!