ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் தொடங்கி தண்ணீர் குடிப்பது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக கோடையில் தாகம் அதிகமாக ஏற்படும் நிலையில் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
ஒருவரின் வயது, பாலினம், காலநிலை, உடல் இயக்கம், உடல்நலப் பிரச்னைகள், கர்ப்ப காலம், பாலூட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில்தான் ஒருவருக்கு தண்ணீர் தேவைப்படும். பொதுவாக ஆண்களுக்கு 12-13 டம்ளர், அதாவது மூன்றரை முதல் 3.7 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். பெண்களுக்கு ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் அதாவது சுமார் இரண்டரை முதல் 2.7 லிட்டர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 13 டம்ளர் வரை தேவைப்படும். இது பொதுவான அளவீடு.
வெப்பமான பகுதியில் வசிக்கிறார்கள், உடல் இயக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் உடலுக்குக் கூடுதல் தண்ணீர் தேவைப்படலாம். அதற்கேற்ப தண்ணீர் குடிக்கும் அளவையும் அதிகரிக்க வேண்டும். வெறும் தண்ணீர் மூலம் மட்டுமல்ல, நாம் எடுத்துக்கொள்ளும் காபி, டீ, பால், மோர், சூப், குழம்பு, பழங்கள், நீர்க்காய்கறிகள் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் நீர்ச்சத்து உடலுக்குச் செல்லும்.
சிறுநீரின் நிறம் வெள்ளையாக அல்லது வெளிர் மஞ்சள் (Pale Yellow) நிறத்தில் இருந்தால் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிந்துகொள்ளலாம். சிறுநீர் அடர் நிறத்தில் இருந்தால் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்று அர்த்தம். சில மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறுநீரின் நிறத்தில் மாற்றம் வரும். அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பொதுவாக சிறுநீரின் நிறத்தை வைத்தே இதைக் கண்டறியலாம்.
ஏசி அறையிலேயே இருப்பவர்களுக்கு, உடல் இயக்கம் குறைவாக இருப்பவர்களுக்கு வியர்வை வெளியேறாது என்பதால் தாகம் எடுக்காது. கண்ணின் எதிரில் தண்ணீர் இல்லாவிட்டால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்படாது. அதேபோல வயதானவர்களுக்கு தாக உணர்வு ஏற்படுவது (Thirst Mechanism) மாறியிருக்கும் என்பதால் அவ்வளவாக தாகம் ஏற்படாது.
மேலும், சர்க்கரை நோய், சிறுநீர்க்கசிவு போன்ற பிரச்னைகளால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்பதால் தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்வார்கள். இது போல இருப்பவர்கள் ஒருநாளைக்கு குடிக்க வேண்டிய தண்ணீரை அளந்து ஒரு பாத்திரத்தில், பாட்டிலில் வைத்து, அவ்வப்போது குடித்துக்கொள்ளலாம்.
சிறுநீரகம் நன்றாக வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் கூடுதலாக நீர் சிறுநீராக வெளியேறிவிடும். அதற்காக ஒரே நேரத்தில் ஏழெட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கக்கூடாது. இது சிறுநீரகத்துக்கு கூடுதல் பளுவைக் கொடுக்கும். சிறுநீரகம், இதயம், கல்லீரல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவு தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்.
அதே வேளையில், தாகத்துக்கு சோடா, கார்பனேட்டடு குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவையும் அதகரித்து, கலோரிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும். மோர், இளநீர், சூப் போன்வற்றை எடுத்துக்கொள்ளலாம். ஜூஸாக குடிக்காமல் பழங்களை அப்படியே சாப்பிடலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வெள்ளரி சாப்ஸ்
பன்னீர் ‘பழக்க’ தோஷம்: அப்டேட் குமாரு
பார்ட் டைம் அரசியல்வாதி… நாதஸ் திருந்திட்டான் காமெடிதான்… : மோடி – எடப்பாடியை தாக்கிய ஸ்டாலின்
கச்சத்தீவை பற்றி பாஜக பேசுவது வேடிக்கையானது : எடப்பாடி பழனிசாமி