உலக அளவில் தினமும் ஒரு நபருக்கு இரண்டு கிராம் சோடியம் (உப்பு) சத்து போதுமானது. இந்தியா வெப்ப மண்டல நாடு என்பதால், வியர்வை மூலமாக நம் உடலில் சோடியம் சத்து அதிகம் வெளியேற வாய்ப்புள்ளது.
எனவே, நாம் ஐந்து கிராம் அளவுக்கு உப்பை தினசரி எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவத் துறையால் குறிப்பிடப்படுகிறது.
ஏ.சி அறையில் வேலை செய்பவர்கள், வியர்வை அதிகம் வராத வேலைச்சூழல் கொண்டவர்கள் மிகவும் குறைவாக அல்லது தினசரி ஐந்து கிராம் அளவுக்கும் குறைவாக உப்பு எடுத்துக்கொள்ளலாம்.
உடலில் வெயில் படும்படியான வேலைச்சூழல் கொண்டவர்கள், மோரில் சிட்டிகை அளவில் உப்பு சேர்த்து தினமும் 2 – 3 முறை குடிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிகை அளவு உப்பு அல்லது எலுமிச்சைச்சாறு சேர்த்தும் குடிக்கலாம்.
கோடைக்காலத்தில் மோர் அல்லது நீர்மோரில் சிட்டிகை உப்பு சேர்த்து தினமும் ஓரிரு முறை குடிப்பதால், நீர்ச்சத்து வெளியேறுவதால் ஏற்படும் சோடியம் குறைபாட்டை ஈடுகட்டலாம்.
உணவகங்கள் மற்றும் சாலையோர தின்பண்டக் கடைகளில் சுவையைக் கூட்ட உப்பு இயல்பைவிடவும் அதிகம் சேர்க்கப்படுகிறது. அந்தச் சுவை நம் நாக்கைக் கட்டிப்போடுவதால், அடிக்கடி அத்தகைய உணவுகளைச் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக்கொள்கிறோம்.
பேக்கரி உணவுகளில் சமையல் சோடா அதிகம் சேர்க்கப்படுவதாலும் உடலில் உப்புசத்து கூடும். இதுபோன்று உப்பு அதிகம் பயன்படுத்துவதால், ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளன.
இதய பாதிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் உப்பு அதிகம் எடுத்துக்கொண்டால், சிக்கல் அதிகமாகும்.
சாதத்தில் பலரும் உப்பு சேர்ப்பார்கள். அது அவசியமில்லை. குழம்பு மற்றும் பொரியலில் சேர்க்கப்படும் உப்பே போதுமானது.
சாலட் உணவில் உப்பு சேர்க்காமலும் சாப்பிடலாம். உப்புக்கு மாற்றாக எலுமிச்சைச்சாறு பயன்படுத்தலாம்.
ஊறுகாய், கருவாடு உள்ளிட்ட உப்பு அதிகமுள்ள உணவுகளை மிகக் குறைவான அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
கீரை, கறிவேப்பிலை உட்பட சோடியம் சத்துள்ள பிற உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமாகவும் உடலுக்குத் தேவையான சோடியம் சத்து பூர்த்தியாகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காற்று மாசு ஏற்படுத்தியதால் கெஜ்ரிவால் கைது: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: நயினாருடன் கள்ளத் தொடர்பில் திமுக நிர்வாகிகள்- ஸ்டாலின் எச்சரிக்கை!
என் பொதுவாழ்வில் முதல் கைது இஸ்லாமியர்களுக்காகத்தான்…. -கதிர் ஆனந்துக்காக உதயநிதி பிரச்சாரம்!