வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு இன்றுடன் (ஜூலை 31) முடிவடையும் நிலையில், தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்ய குறிப்பிட்ட தேதி வருமான வரித்துறையால் அறிவிக்கப்படும். அதன்படி 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. மேலும் வரியை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என வருமான வரித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
ஒரு வேளை, இன்று வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் ஆகும் பட்சத்தில் வரிச்சட்டத்தின் பிரிவு 234A, 234B மற்றும் 234C ஆகிய மூன்று பிரிவுகளில் கூடுதல் வட்டி மற்றும் அபராதங்களை செலுத்த வேண்டும். வருமான வரிச்சட்டம் 1961 இன் பிரிவு 234F இன் படி 5 லட்சம் வரை உள்ள வருமானம் பெறுபவர்கள் இன்று வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் ரூ.1000 அபராதம் என்றும், 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் மற்றும் கூடுதல் வட்டியினை எப்போது வருமான வரி தாக்கல் செய்யப்படுகிறதோ அதற்கு முன்பே கட்ட வேண்டியது அவசியம்.
இந்நிலையில் வருமான வரித்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அது குறித்து சமூகவலை தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று காலை முதல் ‘itrfilling’ என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
இந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி வரை 4.52 கோடி பேர் வருமான வரித் தாக்கல் செய்துள்ளனர். 2020-21ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் 5.89 கோடி அளவுக்கு நடந்தது என்று வருமான வரித்துறை தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா