“இன்னிக்கு இது எத்தனையாவது காபி?”, “சரியா தெரியல… 15 தாண்டி போயிட்டு இருக்கு” – இப்படியான பதில்களை நம் குடும்பத்தில், அலுவலகத்தில், நண்பர்கள் இடையில் அடிக்கடி கேட்டிருப்போம்.
ஏன்… நாமேகூட இந்த மாதிரியான பதிலைச் சொல்பவராக இருக்கலாம். இப்படி அதிக அளவில் காபி, டீ குடிப்பது ஆரோக்கியமானதா, ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்… விளக்குகிறார்கள் உணவியல் ஆலோசகர்கள்…
“காபி, டீ இரண்டிலுமே கஃபைன் உள்ளது. கஃபைன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படும்.
காலையில் எழுந்ததும் முதலில் தண்ணீர் குடிப்பது நல்லது. குடல்பகுதியில் தங்கியிருக்கும் கழிவுகளை நீக்குவதற்கு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உதவும்.
காபி, டீயில் சர்க்கரை அளவும், கலோரி அளவும் அதிகமாக இருக்கும். எனவே முதலில் தண்ணீர் குடித்துவிட்டு காபியோ, டீயோ எடுத்துக்கொள்ளலாம்.
உட்கொள்ளும் பிற ஊட்டச்சத்துகளை நமது உடல் கிரகித்துக்கொள்வதை கஃபைன் தடுக்கும். எனவே, உணவு சாப்பிடுவதற்கு முன்பாகவோ, சாப்பிட்ட உடனேயோ டீ, காபி குடிக்க வேண்டாம்.
உணவுக்கும் டீ, காபி குடிப்பதற்கும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செல்பவர்கள் அல்லது காலை உணவு தயாரிக்க நேரமில்லை, இயலவில்லை என்றால் தற்காலிக தேர்வாக ஒரு காபி அருந்தலாம்.
காலை உணவைத் தொடர்ந்து தவிர்த்துவிட்டு, தினமும் இதுபோன்று டீ, காபி குடிக்கக்கூடாது. வேறு வழியே இல்லை என்றால் ஒரிரு நாட்கள் குடிக்கலாம்.
காபியாக இருந்தாலும் டீயாக இருந்தாலும் ஒரு நாளைக்கு 70 முதல் 140 மி்ல்லி அதாவது இரண்டு கப் எடுத்துக்கொள்ளலாம். மிக அதிகபட்சமாக மூன்று கப் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் 6, 7 கப் வரை சென்றால் அது அடிக்ஷன்தான். அதேபோல ஒரு கப் காபி, டீக்கு 2-3 கிராம் (5 கிராம் என்றால் ஒரு டீஸ்பூன்) சர்க்கரை போட்டுக்கொள்ளலாம்.
அதிகமாக காபி, டீ குடித்தால் தூக்கம் பாதிக்கப்படும். இன்சோம்னியா தொடங்கி மலச்சிக்கல், மூளையின் செயல்திறன் குறைதல், படபடப்பு, எரிச்சலுணர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது உள்ளிட்ட பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்புள்ளது.
ஒருவர் தினமும் 6, 7 கப் காபி, டீ குடிக்கிறார்கள் என்றால் 10 டீஸ்பூனுக்கு அதிகமான சர்க்கரை சேர்ந்திருக்கும். தொடர்ந்து அதிகமாக சர்க்கரை சேர்ப்பதால் நீரிழிவு வருவதற்கும் வாய்ப்புள்ளது. இன்சுலின் எதிர்ப்புத்திறன் பாதிப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. நீரிழிவு உள்ளவர்கள் கூடுதல் சர்க்கரை, தேன் சேர்க்காமல் பால் மட்டும் சேர்த்து டீ, காபி எடுத்துக்கொள்வது நல்லது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…