உலகம் வெப்ப மயமாக உருமாறிக்கொண்டிருப்பதற்கு, காடுகள் அழிப்பு, மக்கள்தொகை பெருக்கம், காற்று மாசு எனப் பல காரணங்களை அலசி ஆராயத் தொடங்கிவிட்டோம்.
பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒருபுறம் வழி தேடிக்கொண்டிருந்தாலும், இப்போதைக்கு வெப்பத்திலிருந்து தப்பிக்க, நம் உடலை குளிர்ச்சியாக்கும் வழிமுறைகளை ஆராய்ந்தறிய வேண்டிய சூழலில் நிற்கிறோம்.
இந்த நிலையில், கோடைக்காலத்தில் நம்மை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த கூல் பானங்கள் உதவும். பன்னாட்டு குளிர்பானங்கள் நிச்சயம் வேண்டவே வேண்டாம். வெயில் காலத்தில் புதிது புதிதாக முளைக்கும் குளிர்பானக் கடைகள் சார்ந்தும் கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம். அக்கடைகளில் விற்பனை செய்யப்படும் தர நிர்ணயம் இல்லாத சாயம் கலந்த குளிர்பானங்களை எக்காரணம் கொண்டும் குடிக்கவே வேண்டாம்.
உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுப்பதோடு செரிமானத் தொந்தரவுகளைத் தடுக்கும் பானகம் அற்புதமான தேர்வு. புளி கரைத்த நீரில் ஏலம், சீரகம், கொஞ்சம் தேன் சேர்த்துப் பருக உடலுக்குத் தேவையான நுண்ணூட்டங்களும் குறைவில்லாமல் கிடைக்கும்.
வேனில் காலத்தில் இயற்கையின் நலச் சீதனங்களான இளநீரையும் நுங்கையும் அன்போடு ஏற்றுக்கொண்டால் பல்வேறு பலன்களை அடையலாம். கலப்படத்துக்கான வாய்ப்பே இல்லாத இளநீரையும் நுங்கையும் தினமும் எடுத்துக்கொள்ள, வேனில் கால வெப்ப நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
சீரகத்தைத் தண்ணீரில் ஊற வைத்து ஊறல் பானமாகப் பயன்படுத்தலாம். நீரில் வெட்டிவேர், நெல்லிக்கட்டை சேர்த்து நீருக்கு மருத்துவ குணத்தைக் கூட்டலாம்.
தினமும் மோரைப் பருகும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். புரோபயாடிக் கூறுகள் நிறைந்த மோரானது, வெயில் காலத்தில் ஏற்படும் வெப்பக் கழிச்சலைத் தடுப்பதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பன்னாட்டுக் குளிர்பானங்களைக் கொடுத்து உபசரிப்பதற்கு பதிலாக, மோர், பானகம், பழச்சாறு, இளநீர் கொடுத்து வரவேற்றுப் பாருங்கள்.
விருந்தினர்களின் வழியே அன்பும் அரவணைப்பும் குளிர்ச்சியாக உங்கள் இல்லம் புகும். நாம் கொடுத்த இயற்கை பானம் விருந்தினர்களின் நல வாழ்வுக்கும் நல்வித்தாக அமையும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மல்டி வெஜிடபிள் சூப்
ஆரோக்கிய வாழ்விற்கு அன்றாடம் வேம்பு!
ரோகித் சர்மா சதம் வீண்… சென்னைக்கு வெளியே முதல் வெற்றி பெற்ற சிஎஸ்கே!