இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக இப்போது உருவெடுத்துள்ளது ‘ஆங்கிலோஸிங் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Ankylosing Spondylitis) என்று சொல்லப்படும் இடுப்புவலி. இந்தியர்களைப் பொறுத்தவரை பத்தாயிரம் பேரில் 7 முதல் 9 பேரை இந்தப் பிரச்னை பாதிக்கிறது என்கிறது ‘தி ஜர்னல் ஆஃப் ருமட்டாலஜி’ எனும் மருத்துவ இதழ். Hip pain at young
மேலும், பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சராசரியாக 7 ஆண்டுகள் தாமதித்த பிறகே மருத்துவரை அணுகுகிறார்கள். அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவரை அணுகினால் பிரச்சினையை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும் என்கின்றனர் முடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள்.
“நம்முடைய நோய் எதிர்ப்புத் திறனே நமக்கு எதிராகச் செயலாற்றும் ஆட்டோ இம்யூன் குறைபாட்டைச் சேர்ந்தது ‘ஆங்கிலோஸிங் ஸ்பாண்டிலைட்டிஸ்’ என்று அழைக்கப்படும் இடுப்புவலி. வயதானவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சினை ஏற்படாது. இளம் வயதினரையே அதிகம் பாதிக்கிறது.
குறிப்பாக 20 முதல் 35 வயதினருக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். நோய் எதிர்ப்புத்திறன் எதிராகச் செயலாற்றுவதால் உடலிலுள்ள எலும்பு மூட்டுகள் ஒன்றுடன் ஒன்று இணையத் தொடங்கும். கை, கால் உள்ளிட்ட மூட்டுகளில் வலி, இடுப்புவலி, காலையில் எழுந்திருக்கும்போதே மூட்டுகள் விறைப்பாக இருப்பது, சிறிது தூரம் நடந்தாலே மூச்சு முட்டுவது இவையெல்லாம் இந்தப் பிரச்னைகளுக்கான பொதுவான அறிகுறிகள்.
இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்தால், அசைவுகள் முடங்கவும் வாய்ப்புள்ளது. குனிந்து நிமிர்வது, கழுத்தை மேல் நோக்கிப் பார்ப்பது வரை அனைத்துமே சிரமமாகிவிடும். கை, கால் மூட்டுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நகர்வதற்கே சிரமமாகிவிடும். மாத்திரை, மருந்துகள் சரியாக எடுத்துக்கொள்வதன் மூலம் மூட்டுகள் இணையாமல் தடுக்க முடியும். அதனுடன் உடற்பயிற்சியும் செய்வதன் மூலம் பிரச்சினை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.
ஒருவேளை மூட்டுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து, தேய்ந்த நிலையில் ஆகிவிட்டால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வு. அறுவை சிகிச்சையைத் தவிர்க்க வேண்டுமானால் புகைப்பழக்கம், குடிப்பழக்கம் போன்வற்றைக் கைவிட்டு, உடற்பயிற்சி செய்யும் ஆரோக்கிய வாழ்க்கைமுறைக்கு மாற வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவதே சிறந்தது” என்று அறிவுறுத்துகிறார்கள்.