உடல் முழுக்க சரும பாதிப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தோல் உரியும் பிரச்சினையை எதிர்கொள்ளாத அம்மாக்கள், பாட்டிகளே இருக்க மாட்டார்கள்.
தண்ணீரில் அதிக நேரம் கைகளைப் பயன்படுத்தி வேலை செய்கிறவர்களுக்கு இந்தப் பிரச்சினை பரவலாக வரும்.
அதாவது சமையல் கலைஞர்கள், ஹேர் டிரஸ்ஸர்கள், கட்டுமானப் பணியாளர்கள் போன்றோருக்கு அடிக்கடி இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுவார்கள்.
கைகள் வறண்டு, வெடித்துப்போய், சிவந்து, அரிப்புடனும் சீழ்க்கட்டிகளுடனும் காணப்படும். நகக் கண்களில் இன்ஃபெக்ஷன் ஏற்படும். இதை ஒரு பெரிய பிரச்சினையாக நினைத்து, மருத்துவரிடம் சிகிச்சைக்கு வரும் பெண்கள் மிகக் குறைவு. பாதிப்பு தீவிரமான நிலையில் வருவோர்தான் அதிகம்.
இந்தப் பிரச்சினைக்கு உள்புற மற்றும் வெளிப்புற காரணங்கள் என இரண்டும் உண்டு.
வெளிப்புற காரணங்கள் என்று பார்க்கும்போது பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் சோப், லிக்விட், துணி துவைக்கும் டிடெர்ஜென்ட், வீடு துடைக்கப் பயன்படுத்தும் கெமிக்கல் போன்றவை மட்டுமன்றி, சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டு, புளி போன்றவற்றைக் கையாள்வதுகூட காரணமாகலாம்.
இந்தப் பிரச்சினை வராமல் தடுக்க பிரச்சினையைத் தூண்டும் பொருட்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். வீட்டு வேலைகள் பார்க்கும்போது கைகளுக்கு கிளவுஸ் அணிந்து கொள்ளலாம்.
அன்றாட சமையலுக்கு புளி, பூண்டு போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே, அவற்றைக் கையாளும்போது நேரடியாக கைகள் படாமல் ஸ்பூன் உபயோகிக்கலாம் அல்லது வேறு யாரின் உதவியையாவது நாடலாம்.
தினமும் கைகளுக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கவும். இப்படியெல்லாம் செய்த பிறகும் பிரச்சினை வருகிறது என்றால் சரும மருத்துவரை அணுகுங்கள்.
உங்கள் பிரச்சினையின் தீவிரத்தைப் பொறுத்து மருந்து, மாத்திரைகளோ, வெளிப்பூச்சுக்கான மருந்துகளோ பரிந்துரைப்பார். மருத்துவரை நேரில் அணுகினால்தான் உங்கள் பாதிப்பின் தீவிரத்துக்கேற்ற சரியான சிகிச்சையை அவரால் பரிந்துரைக்க முடியும்.
வீட்டு வேலை செய்கிற எல்லாப் பெண்களுக்கும் இது சகஜம்தான் என்ற எண்ணத்தில் இந்த அவதியோடு வாழ வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: எதிரில் வரும் வாகன வெளிச்சத்தால் ஏற்படும் கண் கூச்சம்… தவிர்ப்பது எப்படி?
டாப் 10 நியூஸ் : சபாநாயகர் தேர்தல் முதல் ஆளுநரின் டெல்லி பயணம் வரை!