உடலின் மிக முக்கியமான உறுப்பு, மூளை. மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கான பழக்கங்களை, பயிற்சிகளைப் பின்பற்றும் நாம், மூளை ஆரோக்கியத்துக்கு என ஏதாவது செய்கிறோமா?! நம் தினசரிகளில், மூளையின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன?
காலை உணவு என்பது, அந்த நாளை ஆரம்பிப்பதற்கு உடலுக்கும் மூளைக்குமான ஆற்றலைத் தருவது. அதைத் தவிர்த்தால், உடல் இயக்கத்திலும், மூளையின் செயலாற்றும் திறனிலும் சோர்வு உண்டாகும். மேலும், தொடர்ச்சியாகக் காலை உணவைத் தவிர்த்து வரும்போது, நாளடைவில் மூளையின் வேகம் மந்தமாகி, செயல்திறன் குறையும்.
ஆக, காலை உணவைத் தவிர்ப்பது நேரடியாகவோ, மறைமுகமாகவோ மூளையின் புத்துணர்வு குன்ற வழிவகுக்கும் என்பதால் தினமும் காலையில் ஆரோக்கியமான உணவுடன் அந்நாளைத் தொடங்க வேண்டும்.
இன்று பலரும், வீட்டில் இருக்கும்போது, வாகனத்தில் செல்லும்போது, வேலை செய்யும்போதுகூட ஹெட்போன் போட்டுக்கொண்டு யாருடனாவது போன் பேசியபடி இருக்கிறார்கள். அல்லது இசை, பேச்சு ஆடியோக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது வால்யூம் அதிகமாக வைத்தால், அது காதுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன், மூளையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே, அதிக நேரம் ஹெட்போனைப் பயன்படுத்தக் கூடாது என்பதுடன், குறைவான ஒலியில் கேட்பதும் முக்கியம்.
காலை எழுந்தவுடன் காபி என்பது இங்கு பலருக்கும் வழக்கம். சிலருக்கு, வேலை இடைவெளியில், சோர்வாக உணரும்போது, ஒரு செயலைத் தொடங்கும்போது என்று பல சூழல்களிலும் காபி கப்தான் எனர்ஜி பூஸ்டராக இருக்கும். ஆனால், அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் மூளையில் உள்ள தகவல் கடத்தியான அடினோசின் (Adenosine) பாதிக்கப்படும்.
இதனால் சோர்வு, தலைவலி உண்டாகலாம். எனவே, ஒரு நாளுக்கு இரண்டு கப் காபிக்கு மேல் அருந்துவது பரிந்துரைக்கத்தக்கதல்ல.
தனிமையில்தான், மனிதனுக்குத் தனது காரியங்கள் குறித்து யோசிக்கும் வாய்ப்பும் நேரமும் கிடைக்கும். என்றாலும், சுற்றி இருப்பவர்களிடமிருந்து விலகி நீண்ட நேரம் தனிமையில் இருப்பதைத் தொடர்ச்சியாகச் செய்யும்போது, அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மனிதன் ஒரு சமூக உயிரினம். அன்றாடம் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதுதான் நம் வடிவமைப்பு.
எனவே, நீண்ட தனிமை நமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மூளையின் நியூரான்கள் சுறுசுறுப்பாக இருக்க, தனிமை தடையாக இருக்கும் என்பதால்… தனிமையில் இனிமை காண வேண்டாம் அதிக நேரம்!
உடலையும் மனதையும் புத்துணர்ச்சியடையச் செய்ய தரமான தூக்கம் அவசியம். மூளை சிறப்பாகச் செயல்பட, தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். குறைவான தூக்கம் ஒருவருக்குக் கோபம், எரிச்சல் போன்ற உணர்வு மாற்றங்களை ஏற்படுத்தும். போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்றால், அதன் நெடுநாள் விளைவாக மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம்.
எனவே, தினமும் தேவையான உறக்க நேரத்தை எதற்காகவும் யாருக்காகவும் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உடலில் மட்டுமல்லாது மூளையிலும் நீரிழப்பு ஏற்படலாம். இதனால், மூளையின் திசுக்கள் சுருங்கலாம். விளைவாக, சிந்தனை, கணக்கு போன்ற அறிவாற்றல் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படலாம். மேலும், மூளையில் நீர்ச்சத்து குறைவது மூளையில் ஆஸ்மாடிக் சமநிலையின்மையை (Osmotic imbalance) ஏற்படுத்தும். இன்னும், மூளை வீக்கம், வலிப்பு, மயக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.
எனவே, பொதுவாக தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பது மூளைக்கும் நல்லது என்று அறிக.
சிலர் தேவையற்ற எண்ணங்கள், யோசனைகள், தகவல்களால் தங்கள் மூளையை ஓவர்லோடு செய்வார்கள். இதனால் மன உளைச்சல் முதல் மூளை பாதிப்பு வரை ஏற்படும். மேலும், சின்னச் சின்ன விஷயங்களுக்கும் டென்ஷன் ஆவதும் மூளையை சேதப்படுத்தும். உடல்நிலை சரியில்லாத நாள்களில்கூட சிலர், ஓய்வின்றி வேலை செய்வது, தீவிரமாகப் படிப்பது என மூளைக்கு வேலை கொடுப்பார்கள்.
மூளைக்குத் தேவை அவ்வப்போது ஓய்வு; ஓவர்லோடு அல்ல. எனவே, ஜஸ்ட் ரிலாக்ஸ்!
உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சிகளைச் செய்வதுபோல, மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள மனப்பயிற்சிகள் தேவை. அதற்கு, தியானம் செய்வது, மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டுகள் விளையாடுவது, மொழி, இசை என ஒரு புதிய திறனைக் கற்றுக்கொள்வது உள்ளிட்டவறைச் செய்யலாம். இதன் மூலம் மூளையைப் புத்துணர்வாக வைத்துக்கொள்ளலாம்.’’
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: பூக்களால் அலர்ஜியா? சமந்தா சொல்வது நிஜமா?
பியூட்டி டிப்ஸ்: ஆடைகளுக்கு ஏற்ற காலணியைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம்!
ஓ.. இதான் அந்த பழிக்கு பழியா? : அப்டேட் குமாரு
ரஞ்சி கோப்பையில் சதமடித்து… சிஎஸ்கே பவுலர் புதிய சாதனை!