ஹெல்த் டிப்ஸ் : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும்போது மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

Published On:

| By Kavi

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மருத்துவர்கள் உடற்பயிற்சியை வலியுறுத்துகிறார்கள். உடலைக் குறைக்க நினைத்து ஜிம்முக்கு போகிறவர்கள் மாரடைப்பில் மரணிப்பது அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்யும்போது ஹார்ட் அட்டாக் ஏற்படுவது ஏன்…  இதை எப்படிப் புரிந்துகொள்வது… தீர்வு என்ன?

நாம் உயிர் வாழ காற்றும் உணவும் முக்கியம். அதைப் போன்றதுதான் உடற்பயிற்சியும். இன்றைய வாழ்க்கை முறையில் மன அழுத்தத்தினாலும், சீரற்ற உணவு முறைகளினாலும் உடல் பருமனாகிறது. இந்த நிலையில் உடற்பயிற்சியற்று ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் அமர்ந்து பணியாற்றுவதால் நாம் சாப்பிட்ட உணவின் சத்து எரிபடாமல், பயன்படாமல், உடலிலே கொழுப்பாக மாறி எல்லா ரத்தக் குழாய்களிலும் கொழுப்பைப் படிய வைக்கிறது. இது பல நோய்களுக்கு காரணமாகிறது. குறிப்பாக, இதயத்தில் உள்ள மெல்லிய ரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு படிந்து செயல்படாமல் சுருங்கிப் போய் விடுகிறது.

உடற்பயிற்சி செய்பவர்களிடம் இவை சுருங்காமல் இருப்பது மட்டுமல்லாமல், விரியும் தன்மையும் பெறுகிறது. அதனால்தான் சீராக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மாரடைப்பு வருவது அரிது. அப்படி வந்தாலும் முழுமையாகவும் விரைவிலும் குணப்படுத்திவிட முடியும். அதற்காகத்தான் உடற்பயிற்சி அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம். ஆனால்,  ஃபாஸ்ட் லைஃப் முறையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினர் மற்ற நேரங்களில் சும்மாயிருந்து விட்டு உடல் பருமனை உணர்ந்த உடனே உடலைக் குறைக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக இயங்குவார்கள். விரைவாக பருமனைக் குறைக்க நினைத்து ஜிம்மில் சேர்வார்கள்.

காலை 7 மணி முதல் 8 மணி வரை ஜிம்மில் உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஜிம்முக்கு போகிறவர் 15 நிமிடங்கள் தாமதமாக 7.15 மணிக்குச் சென்று 8 மணிக்குள் – 45 நிமிடங்களில் ஒரு மணி நேரப் பயிற்சியில் வேக வேகமாக ஈடுபடுவது ஆபத்தானது. உதாரணத்துக்கு, நிமிடத்துக்கு 72 முறை துடிக்க வேண்டிய இதயத்தை அங்கு வேகமாக இயக்குகிறோம். இதயம் வேகமாக இயங்க… இயங்க… வாழ்க்கையும் வேகமாக முடிந்துவிடுகிறது.

நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால்,  கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. நீங்கள் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, ஜிம்முக்கு செல்லத் தொடங்கினால், இதயநோய் மருத்துவரிடம் உங்களைப் பரிசோதித்துக் கொள்வது அல்லது மன அழுத்தப் பரிசோதனையை முதலில் செய்து கொள்வது அவசியம்.

எந்த வயதினராக இருந்தாலும் உடற்பயிற்சியில் இருக்கும்போது  மார்புவலி, சுவாசிப்பதில் சிரமம் அல்லது லேசான தலைவலி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். எந்த விதமான அதிகப்படியான உடற்பயிற்சியையும் தவிர்க்க வேண்டும்.

இதயநோய் அபாயத்தைக் குறைக்க மிதமான உடற்பயிற்சி போதுமானது. அதை சீரான முறையில் செய்ய வேண்டும். நாம் நலமாக, வளமாக வாழ உதவும் உடற்பயிற்சி செய்யாததற்கு காரணம் கற்பிக்கக் கூடாது. அதை மகிழ்ச்சியாகச் செய்ய தொடங்கினால் இதய நலத்துடன் வாழலாம் என்கிறார்கள் இதய நல மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

பியூட்டி டிப்ஸ் : உங்களுக்கேற்ற ஷாம்பூ எது? 

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share