ஹெல்த் டிப்ஸ்: திடீர் முடி உதிர்வும்… எளிய தீர்வுகளும்!
எப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த சில நாள்களாக திடீரென எக்கச்சக்கமாக முடி கொட்டுகிறதா…. முதல் வேலையாக நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் உடல்நலத்தை. உங்கள் ரத்த அழுத்தம் அதிகரித்திருக்கிறதா, மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா, சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருக்கிறதா என்றெல்லாம் கவனியுங்கள். காலையில் எழுந்து தலைவாரும்போது அசாதாரணமான முடி உதிர்வை கவனித்தால் இவையெல்லாம் காரணங்களாக இருக்கலாம். மருத்துவ உதவியை நாடுங்கள்.
உடலில் உஷ்ணம் அதிகமானால் கண்கள் பொங்கும், எரிச்சலாக உணர்வோம். சிறுநீர், மலம் கழிக்கும்போதும் எரிச்சல் இருக்கும். பாதங்களில் எரிச்சல் இருக்கும். இதுவும் முடி உதிர்வின் மூலமே நமக்கு உணர்த்தப்படும். எனவே, உடல் சூட்டைத் தணிக்கும்படியான எண்ணெய்க் குளியல் எடுப்பது, குளிர்ச்சியான காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது போன்றவற்றைப் பின்பற்றினால் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம்.
இன்று தூக்கமின்மை பிரச்சினை பலருக்கும் இருக்கிறது. இரவு நீண்டநேரம் செல்போன், கம்ப்யூட்டர் பயன்பாடு, டி.வி பார்ப்பது போன்றவையே தூக்கம் கெடுக்கும் காரணிகள். சிலருக்கு மன அழுத்தம் காரணமாக தூக்கம் பாதிக்கப்படும். தூக்கமில்லாதபோது உடலில் செரட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு குறையும். அதன் விளைவாக முடி உதிர்வு அதிகமிருக்கும்.
இப்போதெல்லாம் திடீர் திடீரென வானிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எப்போது வெயில் அடிக்கும், எப்போது மழை வரும் என்று கணிக்க முடிவதில்லை. அசாதாரண வானிலை மாற்றங்களாலும் முடி உதிர்வு இருக்கும். குறிப்பாக, குளிர் நாள்களில் முடி அதிகம் உதிரும். அந்த மாற்றத்துக்கேற்ப கூந்தலைப் பாதுகாக்க வேண்டும். வெளியே செல்லும்போது கூந்தலை மூடியபடி செல்வது நல்லது.
பார்லர்களிலோ, வீட்டிலோ அடிக்கடி செய்துகொள்கிற கெமிக்கல் சிகிச்சைகளால் பலருக்கும் முடி உதிர்வு பிரச்சினை அதிகரிக்கிறது. சாதாரண கலரிங் செய்வதில் தொடங்கி, ஸட்ரெய்ட்டனிங், பெர்மிங் போன்ற சிகிச்சைகள், அவற்றுக்குப் பிறகான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் முடி உதிர்வு அதிகமிருக்கும். உங்கள் முடியின் தன்மை, அதன் ஆரோக்கியம் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு இந்தச் சிகிச்சைகளைச் செய்துகொள்ள வேண்டும்.
கூந்தலை அடர்த்தியாகக் காட்டும் வால்யூமைஸிங் ஷாம்பூ போன்றவற்றில் கெமிக்கல் சேர்க்கை அதிகமாக இருக்கும். கூந்தலில் உள்ள எண்ணெய்ப்பசையை அறவே அகற்றினால்தான் முடியை அடர்த்தியாகக் காட்ட முடியும். அதற்கான கெமிக்கல்கள் இந்த வேலையைச் செய்யும்போது முடியின் வேர்க்கால்கள் பிரிந்து,உடைந்து மறுநாள் தலை வாரும்போது அதிகமாக முடி உதிரும். தலைமுடியை எண்ணெய்ப் பசையின்றி காட்டிக்கொள்வதற்காக, சிலர் அளவுக்கதிகமாக ஷாம்பூ பயன்படுத்துவார்கள். இதுவும் வேர்க்கால்களை பாதித்து முடி உதிர்வுக்கு வழி வகுக்கும்.
அடிக்கடி தலைக்குக் குளிக்காவிட்டால் கூந்தலின் வேர்க்கால்களில் வியர்வையோடு அழுக்கும், வெளிப்புற மாசும் சேர்ந்துகொண்டு அடைத்துக்கொள்ளும். இதனால் பொடுகுத் தொல்லையும் வரும். இவையெல்லாம் சேர்ந்து தீவிரமான முடி உதிர்வுக்கு வழி வகுக்கும்.
எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தினமும் இரவில் தலையை சிக்கின்றி நன்கு வாரி, தளர்வான பின்னல் போட்டுக்கொண்டு படுப்பது நல்லது. ஆனால், பலரும் வேலைக் களைப்பில், வீடு திரும்பியதும் கூந்தலை அள்ளி முடிந்து க்ளிப் செய்து கொண்டோ, கொண்டை போட்டுக்கொண்டோ படுத்துவிடுவார்கள். அது மறுநாள் காலை வரை அப்படியே இருக்கும். தலையை வாராமல், சிக்கெடுக்காமல் விட்டால் தலைமுடி உதிரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
மாநிலங்களின் உரிமைக் குரல்: தேசம், வளர்ச்சி, கூட்டாட்சி