சிலர் மூட்டுவலிக்காக முழங்கால்களில் அணியக்கூடிய பேண்டு (knee caps) உபயோகிப்பார்கள். அதை மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பார்கள். இப்படி முழங்கால் பேண்டுகளை வாங்கி அணிந்துகொள்ளலாமா… இது பலன் அளிக்குமா? பதில் சொல்கிறார்கள், புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர்கள்.
“மூட்டுவலி என்றில்லை, வேறு எந்த வலியானாலும், முதலில் அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. அதைத் தவிர்த்து, பொதுவான ஒரு தீர்வைப் பின்பற்றுவது என்பது சரியான விஷயமே அல்ல.
மூட்டுவலிக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். ஒருவேளை, தேய்மானம்தான் காரணம் என்றாலுமே, அதற்கான தீர்வு என்பது நபருக்கு நபர் வேறுபடும். நம் முழங்கால் மூட்டுகளின் முக்கியமான வேலை என்பது நம் உடல் எடையைத் தாங்குவது. நடக்கும்போது நம் உடலின் எடையை 70 சதவிகிதம் வரையிலும், ஓடும்போது 90 முதல் 100 சதவிகிதம் வரையிலும் மூட்டுகள் வழியே தரைக்கு இறங்கும். இத்தனை எடையைத் தாங்குவதால், மூட்டுகள்தான் நமக்கு முதலில் தேய்மானமாகின்றன.
இப்படிப்பட்ட பேண்டுகள், எடையை சற்று பகிர்ந்து அளிக்க உதவியாக இருக்கும். அதாவது மூட்டுகளில் எந்த இடத்தில் தேய்மானம் இருக்குமோ, அந்த இடத்திலிருந்து எடையைச் சற்று பகிர்ந்து மற்ற இடங்களுக்குச் செலுத்தும் வேலையைச் செய்யும். அதாவது எடையானது பரவலாக விழும்படி வழி செய்து கொடுக்கும்.
தேய்ந்துபோன மூட்டுகள் ஒன்றோடு ஒன்று உராயும்போது ஏற்படும் அழுத்தமானது இதன் மூலம் 30 முதல் 40 சதவிகிதம் வரை குறையும். ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு ஸ்டேஜ் 2 அல்லது 3 என்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும். தேவைக்கேற்ப மருத்துவர்கள் இந்த பேண்டை பரிந்துரைப்பார்கள்.
பேண்டு என பொதுவாகச் சொன்னாலும், அதிலும் 25-க்கும் அதிகமான வகைகள் உள்ளன. யாருக்கு, எந்த பேண்டு, எந்தப் பக்கம் எடை விழ வேண்டும், எந்தப் பக்கம் விழக்கூடாது என்பதையெல்லாம் பார்த்துதான் இது பரிந்துரைக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். எனவே, முதலில் உங்கள் மூட்டுவலிக்கான காரணம் அறிந்து சிகிச்சை எடுங்கள்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில் சாதி குறித்த சட்டப் போராட்டம்! பாகம் 3.
டாப் 10 நியூஸ் : அமித் ஷாவுக்கு எதிராக தொடரும் போராட்டம் முதல் கிறிஸ்துமஸ் விழாவில் மோடி வரை!