ஹெல்த் டிப்ஸ்: ஒரு வேளைக்கு எந்த அளவு காய்கறிகள் சாப்பிட வேண்டும்?

Published On:

| By Selvam

நம் நாட்டில் காய்கறிகளையும் பழங்களையும் மிகக்குறைவாகவே சாப்பிடுகிறார்கள். ‘என் பசங்களுக்குக் காயே பிடிக்காது’ என்பது வருந்தத்தக்க விஷயம். `நாங்க காய்கறிகள் நல்லா சாப்பிடுவோம்’ என்று  சொல்பவர்களிடம் பேசிப் பார்த்தால், நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் ஒரு வேளைக்கு மொத்தமாக 250 கிராம் காய்கறி மட்டுமே சமைப்பது தெரிய வரும். இது எப்படிப் போதுமானதாக இருக்கும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

“நான்கு பேருக்குக் கிட்டத்தட்ட ஒரு கிலோ காய்கறி சமைத்தால்தான் சரியாக இருக்கும். காய்கறிகள் உடலுக்கு நல்லது என்கிற விழிப்பு உணர்வு இருப்பவர்கள்கூட, சாம்பாரில் இருக்கிற காய்கறிகளில் ஒரு கரண்டி, பொரியலில் ஒரு கரண்டி என்று சாப்பிடுவதே போதுமானது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் சாப்பாட்டுத் தட்டில் பாதியளவு காய்கறிகள்தான் இருக்க வேண்டும். கால் பாகம் அரிசி சாதமும், மீதமுள்ள கால் பாகம் பருப்பு அல்லது முட்டையென்று இருக்க வேண்டும். நாம் தலைகீழாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒரு நபர், ஒரு வேளைக்கு 150 கிராம் காய்கறி சாப்பிட வேண்டும். அதிலும் வெந்தவுடன் அளவில் குறைந்துவிடும் வெண்டைக்காய், நீர்க்காய்கறிகள் என்றால் 200 கிராம் சாப்பிட வேண்டும். பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகள் வெந்தாலும் அளவு குறையாது என்பதால், அவற்றை 150 கிராம் சாப்பிட்டாலே போதும். கிராம் கணக்கை அளவிட்டுச் சாப்பிட முடியாது என்பவர்கள், ஒரு வேளைக்கு ஒன்றரை கப் காய்கறி சாப்பிட வேண்டும். இதை வெந்த காய்கறிகள் ஒரு கப், காய்கறி சாலட் அரை கப் என்றும் சாப்பிடலாம். சிறிதளவு காய்கறி சூப்பாகவும் அருந்தலாம்.

இப்படி சாப்பிட்டால்தான் வைட்டமின், தாது உப்புகள், நார்ச்சத்து இவையெல்லாம் உடலுக்குக் கிடைத்து, ஆயுள் நீளும். அதில் சந்தேகமே வேண்டாம்’’ என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: திமுக எம்.பி-க்கள் கூட்டம் முதல் பார்டர்  கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரை!

கிச்சன் கீர்த்தனா: வெள்ளரி புதினா கூல் சூப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment