ஹெல்த் டிப்ஸ்: முதுகு வலி… தப்பிக்க இதோ வழி!

டிரெண்டிங்

”இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமே முதுகு வலியும் இருக்கிறது. உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒருசேர முதுகுத் தண்டில் குவிவதால் ஏற்படும் பிரச்சினை இது” என்கிறார்கள் எலும்பு மூட்டு நிபுணர்கள்.

”உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதுதான் பலருக்கும் முதுகு வலி வருவதற்கான முக்கியக் காரணம். வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள ‘டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி வரும்.

எலும்பின் உறுதித்தன்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியத்தின் பங்கு முக்கியமானது. 20 வயது இளைஞனின் எலும்பில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், எலும்புகளும் வலுவாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது இந்த கால்சியத்தின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து எலும்பு மெலிந்து, மிருதுத்தன்மையை அடைந்துவிடும். இதை ‘எலும்பு மெலிதல்’ (Osteoporosis) என்கிறோம்.

நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் ‘வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேரமாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வது நல்லது!

‘பாலில் கால்சியம் சத்து உண்டு. எலும்பின் ஆரோக்கியத்துக்கு இது நல்லது’ என்று நினைத்து நிறைய பேர் பால் குடிக்கிறார்கள். ஆனால், பாலில் உள்ள கால்சியத்தைப் பிரித்தெடுக்கும் ரெனின் என்சைம் (Rennin Enzyme) குழந்தைகளின் (குறிப்பிட்ட வயது வரை) உடலில் மட்டுமே சுரக்கிறது. பெரியவர்களுக்கு இந்த வகை என்சைம்கள் இயற்கையாகவே உடலில் சுரப்பது இல்லை. எனவே, எவ்வளவுதான் பால் குடித்தாலும் அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்கு கிடைக்காது.

அடுத்ததாக, கார்பனேட்டட் டிரிங்க்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் பாஸ்ஃபோரிக் அமிலம் (Phosphoric Acid) சேர்ப்பார்கள். இது உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதைத் தடை செய்யும். எனவே, இதுபோன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும்.

நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது” என்கிறார்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்

பியூட்டி டிப்ஸ்: எல்லா காலத்துக்கும் ஏற்றதா லிப் பாம்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *