“நம்மில் பலர், வயிற்றில் வலி எடுத்தாலோ… மலம் கழிப்பதில் மாறுபாடுகள் தெரிந்தாலோ… முதல் நாள் சாப்பிட்டதை நினைவுப்படுத்தி… அதனால்தான் ஏற்பட்டு இருக்கும் என்று ஆறுதல்படுத்திக்கொண்டு, அடுத்த வேலையை கவனிக்கிறார்கள். வலி மேலும் தொடர்ந்தால் சுய வைத்தியமாக மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள். health tips dont diet
செரிமான மண்டலத்தில் அளவில் பெரியதும், தேவைக்கு ஏற்ப நன்றாக விரிந்து கொடுக்கக்கூடியதுமான உறுப்பு, இரைப்பை. உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்கு உணவு வந்து சேர்கிறது. இரைப்பையில் இருக்கும் அடர் அமிலங்கள் அதிக வீரியமானவை. இந்த அமிலம், நமது மேல் தோலில்பட்டால், பொத்தலை ஏற்படுத்திவிடும். இவ்வளவு வீரியமான அமிலங்கள் இரைப்பையின் நான்கு அடுக்குச் சுவர் போன்ற தசைகளால் பாதுகாக்கப்படுகின்றன. அமிலங்கள், நாம் சாப்பிடும் உணவுகளைச் சிதைப்பதற்கு மட்டும் அல்ல, உணவில் இருக்கும் கிருமிகளை அழிப்பதற்கும் பயன்படுகின்றன.
இரைப்பையில் மியூகோஸா (Mucosa) எனப்படும் ஒருவகை சளிசவ்வு இருக்கிறது. இது, உமிழ்நீர் போல சுரந்துகொண்டே இருக்கும். உணவுடன் இது கலக்கும்போதுதான், உணவுப்பாதையில் பயணம் சுகமாகும். இல்லையெனில், இரைப்பையைத் தாண்டி உணவு பயணிக்கும்போது, அதிக அளவு அமிலத்தன்மையால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும்.
இரைப்பையின் வேலை, உணவை அரைப்பது, கிருமிகளை அழிப்பது, வெளியே அனுப்புவதுதான். உணவைத் தேவையான நேரத்துக்குச் சாப்பிடாமல் தவிர்க்கும்போதுதான், பெரும்பாலும் இரைப்பை பாதிக்கப்படுகிறது. புற்றுநோய்க்கு காரணமாகிறது.
விரதம் இருப்பது என்றில்லை. அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட, நாள்பட்ட மீன், இறைச்சி வகைகள் மற்றும் அதிக அளவில் உப்பு சேர்க்கப்பட்டு ஊறுகாய்களாக தயாரிக்கப்படும் காய்கறிகள் போன்றவற்றைச் சாப்பிடுவதும் இரைப்பை புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். அதே போன்றதுதான் அதிக காரமான உணவுகளைச் சாப்பிட்டாலும் இரைப்பை மற்றும் குடல் தொடர்பான புற்றுநோய்க்கு வாய்ப்பு உண்டு.
வயிறு நிறைய சாப்பிடுவது தவறானது. உடல் உழைப்பு குறைந்தவர்கள், 70-80 சதவிகித வயிறு நிரம்ப சாப்பிட்டால் போதுமானது. இரைப்பை, உணவை அரைப்பதற்கு சராசரியாக மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, சாப்பிட்ட பிறகு அடுத்த மூன்று மணி நேரத்துக்குள் மீண்டும் ஏதாவது நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இரைப்பையில் நன்றாகவோ பாதியோ அரைக்கப்பட்ட நிலையில் உணவு இருக்கும்போது, மேலும் நொறுக்குத்தீனிகளைச் சாப்பிட்டால், செரிமானம் பாதிக்கப்படும். அசைவ உணவுகளைச் சாப்பிட்டதும் ஜூஸ் குடிப்பது, கோலா பானங்களைக் குடிப்பது, ஜங்க் ஃபுட் எனும் நவீன உணவுப் பழக்கம் போன்றவை முற்றிலும் தவறானவை” என்கிறார்கள் குடல்நல மருத்துவர்கள்.