வில்லியம்சன் – போக்லே : ட்ரெண்டாகும் விறுவிறு விருந்து!
டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நாளை (நவம்பர் 24) நடைபெற இருக்கிறது.
ஹர்ஷா போக்லே vs வில்லியம்சன்
இதனை முன்னிட்டு போட்டியை ஒளிபரப்பும் அமேசான் பிரைம் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கடந்த காலத்தில் முக்கியமான ஆட்டங்களில் இந்தியாவை தோற்கடித்ததற்காக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை பழிவாங்கும் வகையில் இந்த விளம்பர வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.
காரத்தால் நெளிந்த வில்லியம்சன்
வீடியோவில், வில்லியம்சன் மற்றும் ஹர்சா உணவருந்துவதற்காக ஒரு ஓட்டலில் அமர்ந்திருப்பது போல வீடியோ தொடங்குகிறது.
அப்போது நியூசிலாந்து கேப்டனிடம் “இந்திய ரசிகர்களிடமிருந்து உங்களுக்காக மூன்று வகையான உணவுடன் ஒரு விருந்து வைத்துள்ளேன்” என்று போக்லே கூறுகிறார்.
இதில் ஆச்சரியப்படும் வில்லியம்சனிடம் முதலில் சிக்கன் டிக்காவை வழங்குகிறார் போக்லே. அதனை சாப்பிட்டதும் காரத்தில் வியர்வை வழியும் வில்லியம்சனிடம், “ இது 2019 உலகக் கோப்பையில் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தியதற்காக” என்கிறார்.
பின்னர் நாகா சாஸுடன் மோமோஸ் வழங்குகிறார். இதை சாப்பிட்டதும் அதே போன்று வில்லியம்சனின் கண்கள் விரிகிறது. ”இது 2021 ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதற்காக” என்கிறார் போக்லே.
இறுதியில், விண்டலூ வழங்கப்படுகிறது. அதனை பயத்துடன் உண்ட கேன் வில்லியம்சன் வாயை குவிக்கிறார்.
இதற்கு போக்லே, “ 2021 ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெளியேற்றியதற்காக” என்று கூறுகிறார்.
அதற்கு சிரித்துக்கொண்டே, “ எங்களது வெற்றி உங்களை இவ்வளவு காயப்படுத்தும் என்பது தெரியாது” என்கிறார் வில்லியம்சன்.
இனிப்பு இரு அணிக்கும் தேவை!
அதன்பின்னர் இருவருக்கும் ஜாங்கிரி மற்றும் ஐஸ்கிரீம் இரண்டும் வைக்கப்படுகிறது. இதுகுறித்து பேசும் வில்லியம்சன், “ இதை நான் தான் ஆர்டர் செய்தேன். இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இரு அணிகளுக்கும் தேவைப்படும்” என்று கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில், இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் அரையிறுதியில் படுமோசமாக தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த வீடியோ, அமேசான் பிரைம் வீடியோவின் டிவிட்டர் பக்கத்தில் மட்டும் இதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் கண்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆன்லைன் ரம்மி தடை மசோதா : அரசுக்கு ஆளுநர் கடிதம்!
சிஏஏ சட்டம் பற்றி கனவு காணாதீர்கள்: அமித் ஷா