கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், 31 கிராம் ஹெராயின் கடத்திய குற்றத்திற்காக கடந்த 19 ஆண்டுகளில் முதன்முறையாக சிங்கப்பூர் நாட்டில் பெண் ஒருவர் நேற்று (ஜூலை 28) தூக்கு தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டில் 500 கிராம் (17.6 அவுன்ஸ்) கஞ்சா மற்றும் 15 கிராம் (0.5 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தினாலே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படும் என்ற கடுமையான சட்டம் அமலில் உள்ளது.
இந்த நிலையில், 50 கிராம் (1.7 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதற்காக 56 வயதான முகமது அஜீஸ் ஹுசைன் என்ற சிங்கப்பூர் நபருக்கு கடந்த புதன்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று 31 கிராம் ஹெராயின் கடத்திய குற்றத்திற்காக 45 வயதான சரிதேவி பிண்டே ஜமானி என்ற பெண் ஒருவர் நேற்று தூக்கிலிடப்பட்டுள்ளார்.
கடந்த 19 ஆண்டுகால சிங்கப்பூர் வரலாற்றில் பெண் ஒருவர் தூக்கிலிடப்பட்டது இதுவே முதன்முறை. முன்னதாக கடந்த 2004ஆம் ஆண்டில் சிகையலங்கார பெண் நிபுணர் யென் மே வொன் என்பவர் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்.
இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இரு கைதிகளுக்கும் தங்களின் தண்டனைகள் மீது மேல்முறையீடு மற்றும் ஜனாதிபதியிடம் கருணை மனு ஆகியவை சமர்பிக்க உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், போதைப்பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனையை நிறுத்துமாறு மனித உரிமைகள் குழுக்கள், சர்வதேச ஆர்வலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை சிங்கப்பூர் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அதற்கு மாறாக போதைப்பொருள் விநியோகத்தை முழுமையாக நிறுத்துவதற்கு மரண தண்டனையே அவசியம் என்று சிங்கப்பூர் அரசு கருதுகின்றது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு நபர் என்ற முறையில் தூக்கிலிடப்பட்டு வருகிறார்.
அங்கு கடந்த 17 மாதங்களில் போதைப்பொருள் குற்றங்களுக்காக இதுவரை 15 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.
மேலும் இந்த ஆண்டில் 5வது முறையாக வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மேலும் ஒரு கைதிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 கிராம் (1.7 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டபட்ட மலாய் இன குடிமகன் ஒருவர் கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரது மேல்முறையீடு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் மரண தண்டனையை எதிர்த்து வரும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த டிரான்ஸ்ஃபார்மேடிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் குழு, அரசின் இந்த இரத்த வெறி பிடித்த போக்கைக் கண்டிப்பதாக கூறியுள்ளது.
மேலும், பலநாடுகள் மரண தண்டனையில் இருந்து விலகியுள்ளன. அண்டை நாடான தாய்லாந்து கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. மலேசியா இந்த ஆண்டு கடுமையான குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனையை ரத்து செய்துள்ளது.
எனவே சிங்கப்பூர் அரசும் மற்ற நாடுகளை போல மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று டிரான்ஸ்ஃபார்மேடிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் அரசு மரண தண்டனையில் உறுதியாக இருந்து வரும் நிலையில், நாடு முழுவதும் சிங்கப்பூர் அரசுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
பத்ரி சேஷாத்ரி கைது: அண்ணாமலை கண்டனம்!
“ஸ்டாலினுக்கு துரைமுருகன்… உதயநிதிக்கு நான்” – ஆ.ராசா