கால்களை இழந்து, 3 குழந்தைகளுடன் தவித்து வந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர், தனக்கு வீடு கட்டி கொடுத்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பேராசிரியரின் உடல்நலம் வேண்டி, வீல்சேரில் சபரிமலை சென்றுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக மதவெறுப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. எனினும் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடும், கேரளாவும் அதிலிருந்து மாறுபட்டு எப்போதும் மதநல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமான மாநிலங்களாக திகழ்கின்றன.
அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது தான் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுதிறனாளி கண்ணன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய ஆசிரியை சமீராவின் மதம் தாண்டிய பயன் கருதா அன்பு.
கேரள மாநிலம் மலப்புரத்தில் வசித்து வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த கண்ணன்(49). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு லாரியில் இருந்து மரக்கட்டைகளை இறக்கும்போது விபத்தில் சிக்கினார்.
இதில் தனது இடது காலை அவர் இழந்தார். பின்னர் மனைவி மற்றும் 3 குழந்தைகளின் வாழ்வுக்காக அவர் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
3 குழந்தைகளை வைத்துக்கொண்டு, கால் இழந்து தவிக்கும் கண்ணனின் பரிதாப நிலையை கண்டு கொண்டோட்டி அரசு கலைக்கல்லூரி பேராசிரியையான சமீரா வருந்தியுள்ளார்.
அதோடு நிற்காமல் கண்ணனுக்கு உதவவும் முடிவு செய்தார். அதன்படி எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் கண்ணனுக்கு மலப்புரத்தில் ரூ. 8 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.
இந்த உதவியை சற்றும் எதிர்பார்க்காத கண்ணன், அவருக்கு எப்படியாவது செய்நன்றி மறவாமல் கைமாறு செய்ய வேண்டும் என்று உறுதிபூண்டார்.
ஆனால் அதற்கு தன்னிடம் பணமில்லை என்ற உண்மை உணர்ந்து வருந்தினார்.
இந்நிலையில் தான் அவருக்கு ஒரு யோசனை எட்டியது. அதன்படி இஸ்லாமிய ஆசிரியை சமீராவின் உடல்நலத்திற்காக சுமார் 300 கி.மீ தூரத்தில் இருக்கக்கூடிய சபரிமலைக்கு வீல் சேரிலேயே செல்ல கண்ணன் திட்டமிட்டார்.
இதுகுறித்து கண்ணன் கூறுகையில், “என்னுடைய வாழ்க்கையை மாற்றியவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சமீரா என்ற ஆசிரியர். எனக்கும் என் குடும்பத்துக்கும் அவர் கடவுள் போன்றவர்.
அவரின் நலனுக்காக நான், கடந்த 15ஆம் தேதி தடம்பரப்பா கிராமத்தில் இருந்து சபரிமலை பயணத்தை தொடங்கினேன்.
தினமும் காலை 6 மணிக்கு சக்கர நாற்காலியில் பயணத்தை தொடங்கி விடுவேன்.
மதியம் சபரிமலை பக்தர்கள் தங்கும் கோவில்கள் அல்லது அன்னதான கவுண்டர்களில் உணவருந்தி விட்டு ஓய்வெடுப்பேன். தொடர்ந்து மாலை 6 மணிக்கு பயணத்தை தொடரும் நான், இரவு 11 மணி வரை பயணம் செய்கிறேன்.
சமீரா ஆசிரியைக்காகவே இந்த பயணம். நான் மனதார அய்யப்பனை வேண்டிக்கொண்டால், அவருக்கு அருள் புரிவார் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறினார்.
செய்த உதவியை அடுத்த 5 நிமிடத்தில் மறந்து விடும் இவ்வுலகில், முடியாத நிலையிலும், மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்காக வேண்டி செல்லும் இந்த மாற்றுத்திறனாளி கண்ணனின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
“மல பில் இன்னும் வரல” : பாஜகவை கடுப்பேற்றிய போஸ்டர்!
தாலிபான்களின் புது கண்டிஷன்: அமெரிக்கா கண்டனம்!